இந்தியாவிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்துவதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது தேசிய நிறுவனங்கள் தரவரிசைக் கட்டமைப்பு (The National Institutional Ranking Framework - NIRF) எனும் முறையை ஏற்றுக் கொண்டுள்ளது.
பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள், பொறியியல் நிறுவனங்கள், மேலாண்மை நிறுவனங்கள், மருந்தியல் நிறுவனங்கள் மற்றும் கட்டிடவியல் நிறுவனங்கள் போன்ற வெவ்வேறுபட்ட வகையான நிறுவனங்கள் அவற்றின் செயல்பாட்டுப் பகுதிகளின் (Areas of Operation) அடிப்படையில் தனித்தனி வகைகளில் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.
NIRF-ன் மூன்றாவது பதிப்பானது கல்வி நிறுவனங்களுக்கான இந்தியத் தரவரிசைகள் 2018-ன் ஒரு பகுதியாக இந்தாண்டு வெளியிடப்பட்டது.
இந்தத் தரவரிசையில் 2809 நிறுவனங்கள் 9 பிரிவுகளில் பங்கேற்றன. மொத்தமாக இந்நிறுவனங்கள் 3954 தனிப்பட்ட விவரங்களை சமர்ப்பித்தன. சில நிறுவனங்கள் பலதரப்பட்ட துறைகள் மற்றும் பிரிவுகளில் விவரங்களை சமர்ப்பித்தன. இந்நிறுவனங்களில் 301 பல்கலைக் கழகங்கள், 906 பொறியியல் நிறுவனங்கள், 487 மேலாண்மை நிறுவனங்கள், 286 மருந்தியல் நிறுவனங்கள், 101 மருத்துவ நிறுவனங்கள், 71 சட்ட நிறுவனங்கள், 59 கட்டிடக்கலை நிறுவனங்கள் மற்றும் 1087 பொதுப் பட்டப்படிப்பு கல்லூரிகள் (General Degree Colleges) ஆகியவை அடங்கும்.