மத்தியப் பட்டியலிலுள்ள இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவின் (Other Backward Class – OBC) துணை வகைப்பாட்டிலுள்ள பிரச்சினைகளை ஆராய அமைக்கப்பட்ட குழுவின் இரண்டாவது மற்றும் இறுதி நீட்டிப்புக்கு மத்திய கேபினெட் அனுமதியளித்துள்ளது. இந்த நீட்டிப்பு 12 வார காலம் அதாவது ஜூன் 2018 வரை செல்லத் தக்கதாகும்.
இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 340ன் அடிப்படையில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு இக்குழு அக்டோபர் 2, 2017 அன்று அமைக்கப்பட்டது.
இதன் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ரோகிணி ஆவார். இக்குழு அக்டோபர் 11, 2017 அன்று முதல் செயல்படத் தொடங்கியது. தற்போது இவ்வாணையம் OBC பிரிவினரைத் துணை வகைப்படுத்தும் மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் மாநில பிற்படுத்தப்பட்ட நலவாரியங்கள் ஆகியவற்றுடன் தொடர்பிலுள்ளது.
இவ்வாணையத்தின் பணிகள்
பரந்த அளவில் OBC பிரிவிலும், குறிப்பாக மத்தியப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள OBC பிரிவிலும் இணைக்கப்பட்டுள்ள சாதிகளுக்கான இடஒதுக்கீடுகளின் நியாயமற்ற விநியோகத்தின் (Inequitable Distribution of Benefits of Reservation) பயன்களின் அளவை ஆராய்தல்.
மத்தியப் பட்டியலில் உள்ளபடி, OBC பிரிவினரின் சாதி, துணை சாதி, வகுப்பு ஆகியவற்றை அடையாளம் காண்தல் மற்றும் அவர்களை முறையான துணை-வகைப்பாட்டில் வகைப்படுத்துதல்.