நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான (ஒரே நாடு ஒரே தேர்தல்) திட்டத்தினைச் செயல்படுத்துவதற்காக என்று, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான இரண்டு மசோதாக்கள் உட்பட மூன்று மசோதாக்களை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது.
முன்மொழியப்பட உள்ள இந்த மசோதாவானது, ‘நியமிக்கப்பட்ட தேதி’ தொடர்பான (1)வது உட்பிரிவினைச் சேர்ப்பதன் மூலம் 82A என்ற சரத்தினைத் திருத்த முற்படும்.
மக்களவை மற்றும் மாநிலச் சட்டசபைகளை ஒன்றாக நிறைவு செய்வது தொடர்பான 82Aவது சரத்தில் (2)வது உட்பிரிவினைச் சேர்க்க முயல்கிறது.
83(2)வது சரத்தினைத் திருத்தவும், மக்களவையின் பணிக் காலம் மற்றும் கலைப்பு தொடர்பான (3) மற்றும் (4)வது புதிய உட்பிரிவுகள் ஆகியவற்றைச் சேர்ப்பதற்கும் இந்த மசோதா முன்மொழியும்.
சட்டப் பேரவைகளைக் கலைப்பது மற்றும் ‘ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துதல்’ என்ற சொல்லைச் சேர்ப்பதற்கு 327வது சரத்தினைத் திருத்துவது தொடர்பான விதிகளும் இதில் இருக்கும்.
இரண்டாவது மசோதாவானது 324A என்ற புதிய சரத்தினைச் சேர்ப்பதன் மூலம் மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களுக்கான தேர்தல்களுடன், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சில விதிமுறைகளை உருவாக்கும்.
இந்த மசோதாவுக்கு குறைந்தபட்சம் 50% மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
புதுச்சேரி, டெல்லி மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய சட்டப் பேரவைகளைக் கொண்ட ஒன்றியப் பிரதேசங்களைக் கையாளும் மூன்று சட்டங்களில் உள்ள சில விதிகளைத் திருத்துவதற்கான மூன்றாவது மசோதாவானது ஒரு சாதாரண சட்டத் திருத்த மசோதாவாக முன் வைக்கப்படும்.
முதல் அரசியலமைப்புத் திருத்த மசோதாவில் முன்மொழியப்பட்ட படி இந்த அவைகளின் விதிமுறைகளை மற்ற சட்டமன்றங்கள் மற்றும் மக்களவையுடன் ஒருங்கிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டிருக்கும்.
டெல்லியின் தேசியத் தலைநகரப் பிரதேச அரசு சட்டம்-1991, ஒன்றியப் பிரதேச அரசு சட்டம்-1963 மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம்-2019 ஆகிய சட்டங்களை திருத்துவதற்கு இந்த மசோதா முன்மொழியும்.
அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்ற, அவையில் மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாத சிறப்பு பெரும்பான்மை தேவைப்படும்.
எனவே, அரசுக்கு 362 உறுப்பினர்களின் ஆதரவு தேவை, ஆனால் மக்கள் அவையில் ஆளுங்கட்சிக்கு 292 உறுப்பினர்களே உள்ளனர்.