PSLV சுற்றுப்பாதை ஆய்வுப் பெட்டகம்-3 (POEM-3) ஆனது பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்ததன் மூலம் எந்தவொரு எஞ்சியப் பாகமும் (விண்வெளிக் குப்பை) இன்றி வெற்றிகரமான முடிவை அடைந்ததால் இஸ்ரோ மற்றொரு மைல்கல்லை எட்டி உள்ளது.
PSLV-C58/XPoSat என்ற இந்தத் திட்டமானது விண்வெளிச் சுற்றுப்பாதையில் எந்தவொரு விண்வெளிக் குப்பைகளையும் உள்ளிடவில்லை.
அனைத்துச் செயற்கைக் கோள்களையும் அவற்றிற்கு ஏற்றச் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்துவதற்கான அதன் முதன்மைப் பணியை நன்கு நிறைவு செய்த பிறகு, PSLV ஏவு கலத்தின் கடைசி நிலைப் பெட்டகமானது அதன் சுற்றுப்பாதையுடன் தொடர்புடைய நிலையான கோணத்தில் (3 சுழல் அச்சு) நிலைப்படுத்தப்பட்ட POEM-3 கலமாக மாற்றப் பட்டது.
ஏவுகலத்தின் இந்த நிலையானது 650 கி.மீ. சுற்றுப்பாதையிலிருந்து அதன் ஆரம்பகட்ட மறு நுழைவினை எளிதாக்கும் 350 கி.மீ. சுற்றுப்பாதைக்கு நகர்த்தப்பட்டது என்பதோடு மேலும் எதிர்பாராத சில மோதல் அபாயங்களைக் குறைப்பதற்காக வேண்டி எஞ்சிய எரிபொருட்களை அகற்றுவதற்காகச் செயலிழக்கம் செய்யப்பட்டது.