ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து PSLV-C53 விண்கலம் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது அதன் துருவச் செயற்கைக்கோள் ஏவுகலத்தின் மூலம் சிங்கப்பூர் நாட்டின் மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது.
இது இந்த மூன்று செயற்கைக்கோள்களை புவியின் தாழ்மட்டச் சுற்றுப்பாதையில் (LEO) நிலை நிறுத்துவதற்காக ஏவப்பட்டது.
இது இந்த ஆண்டில் இஸ்ரோ ஏவிய இரண்டாவது செயற்கைக்கோள் மற்றும் இந்திய விண்வெளி நிறுவனம் ஏவிய இரண்டாவது வணிகரீதியிலான ஏவுதலாகும்.
PSLV-C53 ஏவுகணை வாகனத்தின் மூலம் ஏவப்படும் 55வது விண்வெளித் திட்டமாகும்.
மேலும் இது PSLV-முக்கியப் பகுதியை மட்டும் பயன்படுத்தி ஏவப்படும் 15வது விண்வெளித் திட்டமாகும்.
PSLV என்பது இஸ்ரோவின் முக்கிய மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதன் மிக வெற்றிகரமான ஏவுகலமாகும்.
இது கடந்த காலத்தில் 54 முறை விண்ணில் ஏவப்பட்டது.
மேலும் இது 2008 ஆம் ஆண்டில் இந்தியா விண்ணில் ஏவிய மிகவும் வெற்றிகரமான திட்டமான சந்திரயான்-1 விண்வெளித் திட்டம் மற்றும் 2013 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட செவ்வாய்க் கிரகச் சுற்று விண்கலத்தை ஏவுவதற்கும் இது பயன்படுத்தப் பட்டது.
இந்த ஏவுகலமானது 600 கிமீ உயரத்தில் உள்ள சூரிய-ஒத்திசைவு துருவ சுற்றுப் பாதைக்கு 1,750 கிலோ வரையிலான விண்வெளிப் பொருட்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
IRNSS செயற்கைக்கோள் தொகுப்பு போன்ற பல்வேறு செயற்கைக் கோள்களைப் புவி ஒத்திசைவு மற்றும் புவிநிலைச் சுற்றுப்பாதைகளில் செலுத்தவும் இது பயன்படுத்தப் பட்டுள்ளது.