பஞ்சாப் மாநில அரசானது, அடுத்த ஆண்டு முதல் PUSA-44 நெல் ரகத்தை பயிரிட தடை விதிக்க உள்ளது.
PUSA-44 என்ற நெல் ரகமானது, 1993 ஆம் ஆண்டில் டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிச் சபையினால் (ICAR) உருவாக்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டுகளின் இறுதியில் பஞ்சாப் முழுவதும் உள்ள விவசாயிகளிடையே பெருமளவில் இது பிரபலமானது.
நெல் சாகுபடி செய்யப்பட்ட மொத்த நிலப்பரப்பில் சுமார் 70 முதல் 80% பரப்பளவில் இந்த நெல் ரகம் பயிரிடப்பட்டது.
இருப்பினும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால், வேளாண் துறையானது இந்த நெல் ரகத்தினைப் பயிரிட வேண்டாம் என்று தடை விதிக்கத் தொடங்கியது.
PUSA-44 நெல் ரகமானது ஒரு ஏக்கருக்குக் கிட்டத்தட்ட 85 முதல் 100 மான் (34 முதல் 40 குவிண்டால்கள்) வரை மகசூல் தருவதாகவும், மற்ற நெல் ரகங்களின் சராசரி மகசூல் ஏக்கருக்கு 28 முதல் 30 குவிண்டால்கள் மட்டுமே தருவதாகவும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
ஒரு நீண்ட கால பயிர் ரகமான PUSA-44 என்ற இந்த நெல் முதிர்ச்சி அடைய சுமார் 160 நாட்கள் ஆகும்.
இது மற்ற ரகங்களின் முதிர்வு நாட்களை விட சுமார் 35 முதல் 40 நாட்கள் அதிகம் ஆகும்.
இதற்கு 5 முதல் 6 வரையிலான கூடுதல் பாசன சுழற்சி தேவைப்படுகிறது.
குறுகிய கால நெல் ரகங்களை விட இந்த நெல் ரகம் தோராயமாக 2% அதிக பயிர்த் தாளடிகளை உருவாக்குகிறது.
எனவே, பஞ்சாபில் பயிர்த் தாளடி எரிப்புப் பிரச்சனையில் இது அதிகப் பங்கினை கொண்டுள்ளது.