குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) அமைப்பின் ஆசியப் பல்கலைக்கழகத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் இந்தியாவில் உள்ள 148 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
ஆசியாவில் உள்ள 856 பல்கலைக்கழகங்களைக் கொண்ட ஒட்டு மொத்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் 40வது இடத்தினைப் பெற்று மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது இந்தியாவில் முதலிடத்தைப் பிடித்தது.
அதைத் தொடர்ந்து டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் 46வது இடத்திலும், சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் 53வது இடத்திலும் உள்ளன.
வேலூர் தொழில்நுட்பக் கழகம் (163), பாரதியார் பல்கலைக்கழகம் (171), அண்ணா பல்கலைக் கழகம் (179) ஆகிய தமிழகப் பல்கலைக் கழகங்களும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்தத் தரவரிசைப் பட்டியலில் 148 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றதை அடுத்து, இந்தப் பட்டியலில் ஆசியாவிலேயே அதிகப் பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ள நாடாக இந்தியா திகழ்கிறது.
133 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ள சீனாவையும், 96 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ள ஜப்பானையும் இந்தியா மிஞ்சியுள்ளது.
மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் QS அமைப்பின் 2024 ஆம் ஆண்டு உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் 149வது இடத்தைப் பெற்றுள்ளது.