இந்திய விமானப் படைக்கு S-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை (S-400 Triumf air defence missile systems) கொள்முதல் செய்வதற்கான 40,000 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு இந்தியா இரஷ்யாவுடன் விலை தொடர்பான பேச்சுவார்த்தையை இறுதி செய்துள்ளது.
இரு நாடுகளும் அமெரிக்காவின் தடைகள் மூலம் அமெரிக்காவின் எதிராளிகளை எதிர்க்கும் சட்டத்தின் (Countering America's Adversaries Through Sanctions Act - CAATSA) கூறுகளைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தச் சட்டமானது இரஷ்யாவின் இராணுவ மற்றும் உளவுத் துறை அமைப்புடன் ஒப்பந்தத்தில் பங்கெடுக்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களைத் தண்டிக்க முனையும் சட்டமாகும்.
2016 ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலில் சட்ட விரோதமாகத் தலையிட்டதன் காரணமாக கடுமையான சட்டங்களின் கீழ் இரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா தடைகளினைப் பிறப்பித்துள்ளது.
இந்தியாவானது தன்னுடைய வான் பாதுகாப்பு பொறிமுறையினை வலுப்படுத்துவதற்காக, குறிப்பாக 4000 கிலோ மீட்டர் நீளமுடைய இந்தியா- சீன எல்லை நெடுகிலும் வான் பாதுகாப்பு பொறிமுறையினை வலுப்படுத்துவதற்காக இந்தியா ரஷ்யாவிடமிருந்து நீண்ட தூர வரம்புடைய ஏவுகணை அமைப்பை கொள்முதல் செய்ய உள்ளது.
2016 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ரஷ்யாவானது 400 கிலோ மீட்டர் வரம்பு வரை டிரோன்கள், எதிரிகளின் வானூர்திகள், ஏவுகணைகள் என அனைத்தையும் தாக்கி அழிக்கவல்ல டிரையம்ப் இடைமறிப்பு அடிப்படையிலான ஏவுகணை அமைப்பின் மீது ஓர் ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டன.
S-400 ஏவுகணையானது இரஷ்யாவின் மிகவும் நவீன, நீண்ட தூர, தரையிலிருந்து வான் நோக்கி ஏவக்கூடிய ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பாகும்.