மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆன்லைன் புகார் மேலாண்மை அமைப்பான SHe Box எனும் ஆன்லைன் தளத்தை துவங்கியுள்ளது.
SHe Box – Sexual Harassment e-Box. பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான மின்புகார் பெட்டி.
பணியிடங்களில் பெண் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் சார்பான புகார்களை அளிக்க அவர்களுக்கு இத்தளம் உதவும்.
இதற்கு முன்பு ஜூலை 2017-ல் மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மட்டுமே இத்தளம் தொடங்கப்பட்டது.
தற்போது நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன பெண் பணியாளர்களும் பாலியல் தொல்லைகள் சார்பான புகார்களை தெரிவிக்கும் விதத்தில் இத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்தளமானது 2013-ன் பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டத்தை (Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal Act, 2013) செயல்விளைவோடு நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யும்.
இச்சட்டத்தின் கீழ் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனமானது பெண் பணியாளர்களின் பாலியல் தொல்லைகள் சார்பான புகார்களை விசாரிக்க அதற்கென ஓர் விசாரணை உட்குழுவை அமைப்பது (ICC – Internal Complaints Committee) கட்டாயமாகும்.
இத்தளத்தில் தாக்கல் செய்யப்படும் புகார்களானது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ICC க்கு அனுப்பப்படும். அதன்மூலம் அப்புகார்களின் மீதான ICC-ன் செயல்பாட்டை அமைச்சகத்தால் கண்காணிக்க இயலும்.