ஜப்பானின் விண்வெளி நிறுவனமான JAXA, அதன் ஆளில்லாத விண்கலத்துடனான தொடர்பை இழந்ததையடுத்து சந்திரனுக்கான அதன் தரையிறங்கு ஊர்தித் திட்டச் செயல்பாட்டை முடித்து கொண்டதாக அறிவித்துள்ளது.
சந்திரனை ஆய்வு செய்வதற்கான திறன்மிகு தரையிறங்கு ஊர்தி (SLIM) அல்லது "மூன் ஸ்னைப்பர்" எனும் இந்த கலன் அதன் தரையிறங்கும் ஒரு துல்லியத்திற்காகப் பெயர் பெற்றது.
இது எட்டு மாதங்களுக்கு முன்பு நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது.
இதன் மூலம் நிலவில் மெதுவாக தரையிறங்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது.
ஆனால் இந்த கலன், சந்திரனின் மேற்பரப்பில் தவறான கோணத்தில் தரை இறங்கியது, எனவே அதன் சூரிய ஒளி மின் உற்பத்திப் பலகைகள் தவறான திசையை எதிர்கொண்டன.
சூரியனின் கோணம் மாறியவுடன், SLIM கலன் இரண்டு நாட்களுக்குச் செயல்பட்டது.
அந்த நேரத்தில், அது உயர்-ரகப் புகைப்படக்கருவி மூலம் சந்திரனின் பள்ளம் பற்றிய அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டது.