கலிபோர்னியாவின் வான்டென்பெர்க் விமானப்படைத் தளத்தில் உள்ள 4E விண்வெளி ஏவுதள வளாகத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் (Space x) டின்டின் A (Tintin A / மைக்ரோசாட் -2a) மற்றும் டின்டின் B (Tintin B / மைக்ரோசாட் 2b) எனும் இரு சோதனை செயற்கைக் கோள்களுடன் பாஸ் விண்வெளி திட்ட (Paz Mission) செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.
பால்கான் 9 (Falcon 9) எனும் மறுசுழற்சிப் பயன்பாட்டு இராக்கெட் (Recycled) மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் (Space x) இந்தத் திட்டத்திற்கான செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது.
இவ்விரு செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக சரியான இடத்தில் நிலை நிறுத்தப்பட்டால் இவை நட்சத்திரக் கூட்டிணைவு (Star Link) அமைப்பை ஏற்படுத்துவதற்கு வழி வகுக்கும்.
உலகம் முழுவதும் மலிவான, அதிவேகமான இண்டர்நெட் இணைப்பு வசதியை உண்டாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்களின் திரளே (Satellite constellation) Star link ஆகும்.
Star link அமைப்பானது கீழான புவிச் சுற்றுப்பாதை (Low Earth orbit-LEO) மற்றும் மிகவும் கீழான புவிச்சுற்றுப்பாதை (Very Low Earth orbit-VLEO) என இரு விண்வெளி அடுக்குகளில் சுமார் 12,000 சிறிய செயற்கைக்கோள்களைக் கொண்டுள்ளது.
எல்லைக் கட்டுப்பாடு, புலனாய்வு வேலைகள், இராணுவ செயல்பாடுகள், சுற்றுச்சூழல் கண்காணிப்பு போன்ற பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட ஸ்பானிய ரேடார் இமேஜிங் செயற்கைக் கோளைக் கொண்டது பாஸ் திட்டமாகும் (Paz mission).
கீழான புவி சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள் திரளானது உலகம் முழுவதும் அதிவேக பிராட்பேண்ட் சேவையை வழங்க வல்லது.
மிகவும் கீழான புவிச்சுற்றுப் பாதையில் உள்ள செயற்கைக்கோள் திரளானது இணைய வேகத்தின் திறனை (capacity) அதிகரிக்க உதவும்.
2016 -ஆம் ஆண்டின் நீடித்த மேம்பாட்டிற்கான ஐ.நா. பிராட்பேண்ட் கமிஷன் அறிக்கைப்படி (UN Broadband Commission for Sustainable Development) உலகின் மொத்த மக்கள் தொகையில் 51 சதவீதத்தினர் இணையப் பயன்பாடில்லாது (Offline) உள்ளனர்.
கீழான புவி சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களானது ka,Ku,V போன்ற அதிர்வெண் பட்டைகளில் செயல்படுகின்றன.
மிகவும் கீழான புவிச் சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்கள் V அதிர்வெண் பட்டைகளில் (V band) செயல்படுகின்றன.
கீழான புவிச் சுற்றுப்பாதையானது பூமிக்கு மேற்புறத்தில் 1110 முதல் 1325 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள செயற்கைக்கோள் சுற்று வட்டப் பாதையாகும்.
மிகவும் கீழான புவிச் சுற்று பாதையானது பூமிக்கு மேற்புறத்தில் 335 – 346 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள செயற்கைக்கோள் சுற்றுவட்டப்பாதை ஆகும்.