2018ம் ஆண்டு ஆகஸ்டு 7ம் தேதியன்று மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, ஆகஸ்டு 8ம் தேதியன்று அஞ்சலி செலுத்திய பின் பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத நபருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.
பணியாளர் துறைக்கான இணைமந்திரி ஜிதேந்திர சிங் மக்களவையில் 2005ஆம் ஆண்டு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய குடிமகன்கள் மட்டுமே தகவல் கோர முடியும் என்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் RTIக்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலாது.
முன்னாள் மிச்சிகன் மாநில சட்டமன்ற உறுப்பினரான ரஷிதா லேயிப் ஜனநாயகக் கட்சியின் சார்பாக அமெரிக்க காங்கிரசிற்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ள முதல் முஸ்லீம் பெண்மணியாக உள்ளார். இவர் அமெரிக்க காங்கிரசின் மக்கள் பிரதிநிதித்துவ சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.