இராஜஸ்தான் அரசாங்கமானது பமாஷா யோஜனா திட்டத்தின்கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ்உள்ள (BPL) பெண்கள் அனைவருக்கும் கைபேசியை வழங்கவுள்ளது.
இந்தத் திட்டமானது, அரசாங்கத் திட்டங்களின் நிதி மற்றும் நிதிசாரா சலுகைகளை வெளிப்படையாகக் கொண்டு சேர்க்கும் நோக்கம் கொண்டதாகும்.
சர்வதேச வான் போக்குவரத்து உச்சிமாநாடு புது தில்லியில் தொடங்கியது. இந்த உச்சி மாநாடானது மத்திய வான்போக்குவரத்து அமைச்சகத்தின் இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் சர்வதேச வான்வழிப் போக்குவரத்துச் சங்கத்தால் (IATA) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.
ISSF உலக சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்களுக்கான 10மீ துப்பாக்கி சுடுதல் பிரிவில் முறையே வெள்ளிப் பதக்கத்தையும் நான்காவது இடத்தையும் பெற்ற அஞ்சும் மோட்கில் மற்றும் அபூர்வா சண்டேலா ஆகிய இருவரும் 2020 ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறுவதற்கான இடத்தைப் பிடித்து, இந்திய துப்பாக்கி சுடும் வீரர்களில் முதல் அணி வீரர்களாக தேர்வாயினர்.
மத்திய உள்துறை அமைச்சகமானது, கர்வா மாவட்டத்தில் உள்ள நாகர் அந்தேரி நகரம் மற்றும் அதன் இரயில் நிலையத்தை பன்சிதா நகர் எனப் பெயர் மாற்றம் செய்யும் ஜார்க்கண்ட் அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அரசாங்க நெறிமுறைகளின்படி, கிராமங்கள், நகரங்கள், பெருநகரங்கள் மற்றும் இரயில் நிலையங்கள் போன்றவற்றை பெயர் மாற்றம் செய்வதற்கு அனைத்து மாநிலங்களும், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து தடையின்மைச் சான்றிதல் பெறுவது அவசியமாகும்.
‘நீர்வளப் பாதுகாப்பிற்காக இமயமலையின் நீருற்றுக்களை மீட்டெடுத்தல் மற்றும் சேகரிப்புப் பகுதிகளை உருவாக்குதல்’ என்ற தலைப்பினைக் கொண்ட அறிக்கையை நிதி ஆயோக்கால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவானது சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையானது குடிநீர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த நீரூற்றுகளில் கிட்டத்தட்ட 30% வற்றிக் கொண்டிருப்பதாகவும் 50% நீருற்றுகளில் நீர்வரத்து குறைந்துவிட்டதாகவும் குறிப்பிடுகிறது.
தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய அமைப்பின் 71வது அமர்வு புது தில்லியில் நடைபெற்றது.
பாகிஸ்தானின் 13வது அதிபராக டாக்டர் ஆரிஃப் உர் ரஹ்மான் ஆல்வி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவராவார். அவர், 2018 செப்டம்பர் 9-ம் தேதி அதிபருக்கான பதவிப் பிரமாணம் எடுக்கவுள்ளார்.