தமிழ்நாடு ,மாநில அரசானது, முதலீடுகளை மேற்கொள்ளவும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் விரும்பும் ஜவுளி ஆலைகளுக்கு 6% வட்டி மானியத் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக, நடப்பு நிதியாண்டில் (2024-2025) 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
கடலோரப் பகுதிகளில் அத்துமீறல்களைத் தடுக்கும் முயற்சியில், தமிழக அரசானது 14 மாவட்டங்களில் கடலோரப் பிரிவுகளை நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளது.
கர்நாடக இசைப் பாடகர் T.M. கிருஷ்ணாவிற்கு 'சங்கீத கலாநிதி M.S. சுப்புலட்சுமி விருது' என்ற தலைப்பிலான விருது வழங்குவதற்கு இசை அகாடமி மற்றும் தி இந்து பத்திரிக்கை வெளியீட்டு நிறுவனங்களுக்கு மதராஸ் உயர்நீதிமன்றம் தன் ஒப்புதலை அளித்துள்ளது.
தமிழகத்திற்குச் சொந்தமான ஆவின் பால் நிறுவனம் ஆனது, வைட்டமின் A மற்றும் D ஆகியவற்றைக் கொண்டு செறிவூட்டப்பட்ட கிரீன் மேஜிக் பிளஸ் என்ற ஒரு புதிய பால் ரகத்தினை அறிமுகப்படுத்த உள்ளது.
2024 ஆம் ஆண்டு தேசியப் பஞ்சாயத்து விருது விழாவில் கோவை மாவட்டத்தின் கீரநத்தம் பஞ்சாயத்து ‘சிறந்த தன்னிறைவு மிக்க உள்கட்டமைப்பு’ பிரிவில் விருதினை வென்றுள்ளது.
தஞ்சையில் வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பு நிறுவனம் விண்வெளி சார் புத்தொழில் நிறுவனங்கள் துறையில் “சிறந்தப் புத்தொழில் நிறுவனங்கள் காப்பு நிறுவனங்களுக்கான ஊக்குவிப்பு மையம்” ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தெற்கு இரயில்வே நிர்வாகத்தின் சென்னை கோட்டம் ஆனது, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்திற்குள்ளாக புறநகர் வழித் தடங்களுக்கு குளிர்சாதன வசதியினைக் கொண்ட இரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்த உள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் ரத்தபானி வனவிலங்குச் சரணாலயம் ஆனது இந்தியாவின் 57வது புலிகள் வளங்காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பிரான்சு மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அரபிக் கடலில் "டெசர்ட் நைட்" என்ற முக்கிய வான் வழி போர் பயிற்சியை மேற்கொண்டன.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் இராஜீவ் மேத்தா ஆசிய வாள்வீச்சுக் கூட்டமைப்பின் (FCA) பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
டைம் இதழானது, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்பை 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் 2024 ஆம் ஆண்டின் சிறந்த நபராக அறிவித்து உள்ளது.