2018 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டிணைவு (International Solar Alliance - ISA) பொதுச் சபையின் தொடக்க விழா புது தில்லியில் நடைபெறவிருக்கிறது. இதற்கு அடுத்த தினம் கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டிணைவின் அமைச்சரவை நிலையிலான கூட்டம் நடைபெறவிருக்கிறது.
நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது (ACC - The Appointments Committee of the Cabinet) இந்திய எஃகு ஆணையத்தின் புதிய தலைவராக அனில் குமார் சவுத்திரியை நியமித்துள்ளது. இவர் 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெறும் வரை இப்பதவியை வகிப்பார்.
இதற்குமுன் இந்திய எஃகு ஆணையத்தின் தலைவராக P.K. சிங் பணியாற்றினார்.P.K. சிங் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்றதையடுத்து இப்பதவிக்கு அனில்குமார் சவுத்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசியாவின் மிகப்பெரிய எரிமலையான தமாவந்த் என்ற சிகரத்தின் உச்சியை அடைந்த முதலாவது வங்கப் பெண்மணியாக மேற்கு வங்காளத்தின் கல்யாணி நகரத்தைச் சேர்ந்த மவுசுமி கத்துவா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
பல்கலைக்கழக மானியக் குழுவானது (UGC - University Grants Commission) நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 29-ஐ “துல்லியத் தாக்குதல் தினமாக” அனுசரிக்குமாறு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
‘துல்லியத் தாக்குதல்’ நடத்தியதின் இரண்டாம் ஆண்டு நினைவை என்டிஏ (NDA) அரசாங்கம் செப்டம்பர் 29 அன்று அனுசரிக்க முடிவு செய்துள்ளதையடுத்து பல்கலைக்கழக மானியக் குழு இச்சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
ரஷ்யாவின் ஊக்க மருந்து தடுப்பு நிறுவனமான ‘ருசடா’ (RUSADA) மீது விதித்திருந்த தடையை உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (The World Anti-Doping Agency - WADA) நீக்கியது. இதன்மூலம் இரஷ்ய தடகள விளையாட்டு வீரர்கள் மீண்டும் அனைத்து போட்டிகளிலும் பங்குபெற வழி ஏற்பட்டுள்ளது.
நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது ஏர் இந்தியா நிறுவனக் குழுவின் அரசு அதிகாரி அல்லாத, தனிச்சுதந்திர இயக்குநராக D. புரந்தேஸ்வரியை நியமித்துள்ளது. இவர் 3 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார்.
எல்லைப் பாதுகாப்புப் படையானது தில்லியிலிருந்து பாகிஸ்தான் படையினருடன் தொடர்பு கொள்ள புதிய ஹாட்லைன் (நேரடி தொலைபேசி இணைப்பு) இணைப்பைத் தொடங்கியுள்ளது.
மாலத்தீவின் அதிபர் தேர்தலில் எதிக்கட்சித் தலைவரான இப்ராகிம் முகமது சோலிக், அப்துல்லா யாமீனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பானது (FFI - The Film Federation of India) ரீமா தாஸின் தேசிய விருது பெற்ற கிராம ராக்ஸ்டார்ஸ் (Rockstars) என்ற படத்தை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 91-வது அகாடமி விருதுகளின் சிறந்த அயல்நாட்டு மொழிப் பிரிவில் இந்தியாவின் சார்பாக பிரதிநிதித்துவப்படுத்த தேர்ந்தெடுத்துள்ளது.