குழந்தைகள் உரிமைகளின் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் (NCPCR - National Commission for Protection of child Rights) கட்டணக் கட்டுப்பாடுகளை வடிவமைத்துள்ளது. அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் அடிக்கடி மற்றும் தன்னிச்சையாக குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை உயர்த்துகின்றன. இவற்றைத் தடுத்து ஒரே சீரான கட்டணக் கொள்கையை நடைமுறைப்படுத்த கட்டுப்பாடுகளை இது வடிவமைத்துள்ளது.
குழந்தைகள் உரிமைகளின் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் என்பது நாட்டில் குழந்தை உரிமைகளுக்கான உச்ச அமைப்பாகும். இந்த அமைப்பு வடிவமைத்துள்ள கட்டுப்பாடுகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கும்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தெற்கு சூடான் மீது ஆயுதத் தடைக்கான தீர்மானத்தை [2428 (2018)] நிறைவேற்றியுள்ளது. அழிவுகரமான உள்நாட்டுப் போர் இந்தப் புதிய நாட்டில் தொடங்கி 5 ஆண்டுகள் கழித்து இந்தத் தடை அமலுக்கு வருகிறது.
இத்தீர்மானத்தை அமெரிக்கா வடிவமைத்தது. 6 நாடுகளின் வெளிநடப்புகளுக்கு எதிராக வெற்றி பெறுவதற்குத் தேவையான குறைந்தபட்ச 9 நாடுகளின் வாக்குகளைப் பெற்று இத்தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராம் சாகல், ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் ராகேஷ் சின்ஹா, பாரம்பரிய நடனக் கலைஞர் சோனல் மான்சிங் மற்றும் சிற்பம் செதுக்குபவரான ரகுநாத் மோகபத்ரா ஆகிய நான்கு பேரையும் ராஜ்ய சபை உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 80 (1) (a) கீழ் அமைச்சரவைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இவர்களை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
இந்த நால்வரின் நியமனங்களுக்கு முன்பு, ராஜ்ய சபையில் 8 நியமன உறுப்பினர்கள் உள்ளனர்.
நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு தொழில்நுட்ப கல்விக்கான அனைத்து இந்திய மன்றத்தின் (AICTE - All India Council for Technical Education) தலைவரான பேராசிரியர் அனில் டி சகஸ்ராபுதியின் நியமனத்தை புதுப்பித்து ஒப்புதல் அளித்துள்ளது. அவர் 65 வயது அடையும் வரை இப்பதவியில் தொடர்வார்.
இவர் தொழில்நுட்ப கல்விக்கான அனைத்து இந்திய மன்றத்தின் தலைவராக ஜூலை 2015-ல் பொறுப்பேற்றார்.
ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. டோக்கியோவில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் - ஜப்பான் உச்சி மாநாட்டின் போது, ஐரோப்பிய யூனியன் தலைவர்களான ஜூன் கிளாட் ஜங்கர் மற்றும் டோனால்டு டஸ்க் மற்றும் ஜப்பானியப் பிரதம அமைச்சர் சின்சோ அபே-க்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இது ஐரோப்பிய யூனியனின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஆகும். இது தடையற்ற வர்த்தக மண்டலத்தை ஏற்படுத்தி உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருக்கும்.
பொது இடங்களைப் பெண்களுக்கு பாதுகாப்பான இடங்களாக அமைக்கும் பொருட்டு, கொல்கத்தா காவல் துறையானது ‘தி வின்னர்ஸ்‘ என்ற சிறப்பு அனைத்து மகளிர் ரோந்துக் குழுவை அமைத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்தின் நல்லிணக்கத் தூதுவராக கிராமி விருது பெற்ற வெற்றியாளர் இத்தாலி பாடகர் லாரா பசுணி நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் தூதராக பதவி வகித்த டாக்டர் டிசிஏ ராகவன் உலக விவகாரங்கள் இந்திய ஆணையத்தின் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார் (ICWA - Indian Council of World Affairs). இவர் இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு தலைமையிலான ICWA-ன் நிர்வாக அமைப்பு மற்றும் நிர்வாக ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இயக்குநர் ஜெனரல் என்னும் பதவி இந்திய அரசின் செயலாளர் தகுதிக்கு இணையானதாகும்.