இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஆனது காப்பீட்டுக் கொள்கை சார்ந்த சொற்களை எளிமைப்படுத்துவதற்காக 12 பேர் கொண்ட குழு ஒன்றினை அமைத்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, இந்தியா முழுவதும் இணைய வழி கட்டுப்பாட்டு அம்சங்கள் கொண்ட இல்லம் சார்ந்த மற்றும் இணையவழி சிறு வணிகச் சேவைகளை வழங்குவதற்காக வேண்டி கலிபோர்னியாவைச் சேர்ந்த ப்ளூம் நிறுவனத்துடன் ஒரு கூட்டாண்மையை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் உலகில் அதிக நிதித் தொழில்நுட்பம் சார்ந்த (ஃபின்டெக்) யூனிகார்ன் நிறுவனங்களை (17) கொண்ட நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ள நிலையில் இப்பட்டியலில் அமெரிக்கா (134) மற்றும் ஐக்கியப் பேரரசு (27) ஆகியவை உலகளவில் முதல் இரண்டு இடங்களைத் தக்க வைத்துள்ளன.
உணவு கொள்முதல் மற்றும் விநியோகத் தளமான ஸொமாட்டோ, அதன் பெண் விநியோக ஊழியர்களுக்காக மகப்பேறு காப்பீட்டுத் திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த முன்னெடுப்பானது, இந்தத் தொழில்துறையில் மேற்கொள்ளப்படும் இது போன்ற முதல் வகை முன்னெடுப்பாகும்.
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார் ஆடவர் ஈட்டி எறிதல் F46 இறுதிப் போட்டியில் 68.60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனையை (67.79) முறியடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
மாபுசா, மார்கோ, பாஞ்சிம், போண்டா மற்றும் வாஸ்கோ ஆகிய ஐந்து கோவா மாநில நகரங்கள் 16 நாட்கள் அளவிலான 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை கோவாவில் நடத்த உள்ளன.
7வது இந்தியா கைபேசி மாநாடானது (2023) புது டெல்லியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் கருத்துரு, 'உலகளாவிய எண்ணிம புத்தாக்கம்' என்பதாகும்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியவை இணைந்து கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்காக வேண்டி மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையில் உள்ள கினியா வளைகுடாவில் தங்களது முதலாவது கடற்படைப் பயிற்சியை மேற்கொண்டன.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அவர்கள், டாக்டர் அசோக் கட்கில் மற்றும் டாக்டர் சுப்ரா சுரேஷ் ஆகிய இரண்டு இந்திய-அமெரிக்க அறிவியலாளர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் தேசியப் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார்.
கட்கில் தேசியத் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கப் பதக்கத்தினையும், சுரேஷ் தேசிய அறிவியல் பதக்கத்தினையும் வென்றனர்.