தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் பத்தாண்டுகளுக்கு முன் திட்டமிடப் பட்ட வெளித் துறைமுக சரக்குக் கொள்கலன் கப்பல் முனையத்திற்கான அடிக்கல் சமீபத்தில் நாட்டப்பட்டு அதன் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் அவர்கள், சென்னையில் 6.09 ஏக்கர் பரப்பில் கட்டமைக்கப்படவுள்ள கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவிற்கான அடிக்கல்லை நாட்டினார்.
சிக்கிமின் ராங்போவில் அமைக்கப்பட உள்ள அம்மாநிலத்தின் முதல் இந்திய இரயில் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
ஒருங்கிணைந்த புலிகள் வாழ்விட வளங்காப்புத் திட்டத்தின் கீழ் (ITHCP) இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகள் சுந்தரவனக் காடுகள் பகுதியில் எல்லை கடந்த (நாடுகளுக்கிடையிலான) புலிகள் வளங்காப்பு திட்டத்தினை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்பினை மேற்கொண்டுள்ளன.
இந்திய நாடானது 2035 ஆம் ஆண்டிற்குள் தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கி, விண்வெளித் துறையின் முக்கிய வணிக மையமாகவும் மாறும் என்று பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் அவர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் செயற்கைக்கோள் ஏவு கல ஒருங்கிணைப்பு மையம் (PIF), மகேந்திர கிரியில் (திருநெல்வேலி மாவட்டம்) உள்ள இஸ்ரோ உந்துவிசை இயக்க வளாகத்தில் பகுதியளவு கிரையோ ஜெனிக் வகையிலான ஒருங்கிணைந்த எஞ்சின் மற்றும் பரிசோதனை மையம் (SIEST) மற்றும் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் மூன்று வேக வரம்பிலான (குறையொலி, ஒத்த ஒலி வேகம் மற்றும் மீயொலி வேகம்) காற்றுச் சுரங்கம் ஆகிய மூன்று முக்கிய விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.