இந்திய விமானப் படை மற்றும் அமெரிக்க விமானப் படை ஆகியவற்றிற்கிடையேயான 12 நாட்கள் நடைபெறும் இராணுவப் பயிற்சியானது மேற்கு வங்காளத்தில் கலைக்குண்டா மற்றும் பனகார்க் ஆகிய விமானத் தளங்களில் தொடங்கியது. இதன் நோக்கம் இருநாடுகளுக்கிடையே செயல்முறைசார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதாகும்.
இந்த “எக்ஸ் கோப் இந்தியா - 2018” என்பது இந்திய விமானப் படை மற்றும் அமெரிக்க விமானப் படை ஆகிய இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் பயிற்சித் தொடரின் 4-வது பதிப்பாகும். இப்பயிற்சியானது முதன்முறையாக இரண்டு விமானப் படை தளங்களிலும் நடைபெறுகிறது.
இயற்கை எரிவாயு உற்பத்தியில் தனது கவனத்தை செலுத்துவதற்காக பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து (OPEC - Organization of the Petroleum Exporting Countries) விலகுவதாக கத்தார் அறிவித்துள்ளது. 1961 ஆம் ஆண்டு முதல் கத்தார் OPEC-ல் உறுப்பினராக உள்ளது.
2018 ஆம் ஆண்டிற்கான போர்ப்ஸ் இந்தியாவின் இந்தியப் பணக்கார பிரபலங்களின் தரவரிசையில் 52 வயதுடைய நடிகரான சல்மான் கான் முதலிடத்தில் உள்ளார். இவருடைய வருமானம் 253.25 கோடி ஆகும். இந்த தரவரிசைப் பட்டியலில் இவர் மூன்றாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இவருக்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடத்திலும் அக்சய் குமார் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
பாகிஸ்தான் அரசு மிக விரைவில் சிகரெட்கள் மற்றும் சர்க்கரை பானங்கள் ஆகியவற்றின் மீது “பாவ வரி”யை (Sin Tax) விதிக்கவிருக்கிறது. இந்த பாவ வரியின் மூலம் கிடைக்கும் நிதியானது சுகாதாரப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படவிருக்கிறது.
“பாவ வரி” (Sin Tax) என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சொற்கூறாகும். இது குறிப்பாக சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய குறிப்பிட்ட பொருட்களின் மீது விதிக்கப்படுகிறது. உதாரணம் : புகையிலை, மிட்டாய் வகைகள், குளிர் பானங்கள், துரித உணவுகள், காபி மற்றும் சர்க்கரை.
இந்தியாவின் மூத்த (107 வயது) யூடியூப் கலைஞரான கரே மஸ்தானம்மா குண்டூர் மாவட்டத்தின் தெனாலிக்கு அருகில் தன்னுடைய சொந்த கிராமமான குடிவாடாவில் காலமானார். இவரது சமையல் யூடியூப் சேனலான “கண்டரி புட்ஸ்”-ற்கு மொத்தம் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
கர்நாடக அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் கல்லூரிகளில் பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டம் ஆகியவற்றைப் பயிலும் பெண் குழந்தைகளுக்கான கல்விச் செலவை தாமே ஏற்றுக் கொள்ள கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மெக்சிகோவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஆண்டிரிஸ் மேனுவல் லோப்ஸ் ஒப்ரோடோர் (AMLO) வெற்றி பெற்று 5 மாதத்திற்குப் பின் அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றார்.