அனில் மணிபாய் நாயக் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC - National Skill Development Corporation) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். NSDC என்பது மத்திய திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தனித்துவ அரசு - தனியார் பங்களிப்புக் கழகமாகும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI – Reserve Bank of India) 24-வது ஆளுநரான டாக்டர் உர்ஜித் படேல் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை டிசம்பர் 10 ஆம் தேதியன்று ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் ஆர்பிஐ-யின் ஆளுநர் ரகுராம் ராஜன் ஓய்வு பெற்றதையடுத்து 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ஆம் தேதியன்று உர்ஜித் படேல் ஆளுநராக பொறுப்பேற்றார். இவரது பதவிக் காலமானது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடையவிருந்தது.
இதன் மூலம், 1990 ஆம் ஆண்டிற்குப் பின்பு தனது பதவிக் காலம் முடிவடையும் முன்பே அப்பதவியை இராஜினாமா செய்த முதலாவது RBI ஆளுநர் இவரே ஆவார்.
இந்தியப் பொருளாதார வல்லுநரான சுர்ஜித் பல்லா பிரதம அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் (PMEAC - Prime Minister’s Economic Advisory Council) உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 5 உறுப்பினர்கள் கொண்ட பிரதம அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவானது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரதமரால் அமைக்கப்பட்டது ஆகும்.
தற்பொழுது இக்குழு மூத்த பொருளாதார வல்லுநர் மற்றும் நிதி ஆயோக்கின் உறுப்பினரான பிபேக் தேபராய் தலைமையில் செயல்பட்டு வருகிறது.