மாநிலத்தில் உள்ள 2381 அங்கன்வாடி மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் மாண்டிச்சோரி கல்வி சார்ந்த மழலையர் பள்ளி (Kinder Garden) வகுப்புகளைத் தொடங்க தமிழ்நாடு அரசானது அரசாணை (G.O.) ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று சமூகநலத் துறை மற்றும் மதிய சத்துணவுத் துறையால் ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையானது தமிழ்நாடு (மதுரை) மற்றும் தெலுங்கானா (பீபீ நகர்) ஆகிய இரண்டு மாநிலங்களில் பிரதான் மந்திரியின் ஸ்வஸ்த்யா சுரக்சா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இரண்டு புதிய அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தை (All India Institute of Medical Sciences-AIIMS) அமைக்க 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதியன்று ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவிற்கான இந்திய தூதுவராக ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்க்லா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நவ்தேஜ் சர்னாவுக்கு அடுத்ததாக இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
குடியேற்றத்தின் மீதான ஐ.நாவின் உலகளாவிய உடன்படிக்கைக்கு இவரின் அரசாங்கம் ஆதரவு வழங்கியதற்கு எதிர் தரப்பினரிடமிருந்து ஏற்பட்ட மிக கடுமையான எதிர்ப்பையடுத்து பெல்ஜியத்தின் பிரதமரான சார்லஸ் மைக்கேல் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது பிரணாப் குமார் தாஸை மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரிக்கான வாரியத்தின் (Central Board of Indirect Taxes and Customs-CBIC) தலைவராக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இவர் வரும் டிசம்பர் 31 அன்று ஓய்வு பெறும் S. ரமேஷ்க்கு அடுத்து பதவியேற்கவுள்ளார்.
முன்னாள் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான W.V. ராமன் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டில் உளவு பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் 6 ஆண்டுகள் இருந்த ஹமீத் நேஹால் அன்சாரி பாகிஸ்தானால் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று விடுதலை செய்யப்பட்டார்.