தனது குழந்தைப் பருவம் முதல் கொத்தடிமைத் தொழிலாளராக இருந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த 85 வயதான கன்னியப்பன் என்பவர் தமிழ்நாடு வருவாய் துறையினால் மீட்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து இதர 50 நபர்களும் மீட்கப்பட்டுள்ளனர். இவர் முதல் முறையாக வாக்களிக்க முடிவு செய்துள்ளார்.
முப்பது ஆண்டுகளாக சூடானின் அதிபராக இருந்த ஒமர் ஹாசன் அல்-பஷிர் என்பவரது ஆட்சிக்கு எதிராக பல மாதங்களாக நடைபெற்ற போராட்டங்களைத் தொடர்ந்து இவர் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரான அகமது அவாத் இபன் அல் என்பவர் மூன்று மாத காலத்திற்கு நெருக்கடி நிலையை அறிவித்ததுடன் 2005 ஆம் ஆண்டின் அரசியலமைப்பையையும் இரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பிறந்தவரும் விக்கி லீக்ஸைத் தொடங்கியவருமான ஜீலியன் அஸாஞ்சே என்பவர் இலண்டனில் உள்ள ஈகுவேடாரின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார்.
மிகப்பெரிய கசிவுகளில் ஒன்றான அரசாங்க இரகசியங்கள் மற்றும் வகைப்படுத்தப்பட்ட தரவுகள் ஆகியவற்றின் கசிவு தொடர்பாக அமெரிக்க அரசின் சதிக் குற்றச்சாட்டுகளை அவர் எதிர் கொள்கிறார்.
அமெரிக்காவின் தனியார் விண்கல ஏவும் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் ஆனது பால்கன் கனரக ஏவு வாகனத்தின் மூலம் சவுதி அரேபியாவின் செயற்கைக்கோளான “அரப்சாட்” என்ற செயற்கைக் கோளை ஏவி தனது முதலாவது வணிக ரீதியிலான ஏவுதலை மேற்கொண்டுள்ளது.