வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கைச்’ சோதனை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து போலியான புகார்களை அளிப்பவர்களுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனையும் ரூ.1000 அபராதத் தொகையும் விதிக்க தேர்தல் நடத்தை விதிமுறைகளின் 49MA என்ற விதியானது வழிவகை செய்கின்றது.
இந்த விதியானது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று அறிவிப்பதற்காக மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் நகரம் மற்றும் இங்கிலாந்து அணியைச் சேர்ந்தவரான ரஹீம் ஸ்டெர்லிங் என்பவர் கால்பந்து எழுத்தாளர்கள் மன்றத்தினால் (FWA - Football Writers' Association) 2019 ஆம் ஆண்டின் கால்பந்து வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.
இந்தியத் தேர்தல் ஆணையமானது பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர் என்று குற்றம் சுமத்தப்பட்ட பிஜேபி வேட்பாளரான சாத்வி பிராக்யா தாக்கூர் என்பவரைப் போபாலில் 72 மணி நேரங்களுக்குப் பிரச்சாரம் செய்யத் தடை விதித்துள்ளது (மே 01, 2019).
உயிரிழந்த இந்தியக் காவல் துறை அதிகாரி ஹேமந்த் கார்கரே மற்றும் பாபர் மசூதி இடிப்பு குறித்த இவரது சமீபத்திய கருத்துகளுக்கு இவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 2024 ஆம் ஆண்டின் பதிப்பை நடத்துவதற்கான ஏலத்தில் கலந்து கொள்ள இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
தேசிய இணைய அமைப்பிலிருந்து தனது நாட்டின் இணையத்தைத் தனிமைப்படுத்துவதற்கு ரஷ்ய அதிகாரிகளுக்கு அனுமதியளிப்பதற்காகவும் ஒரு புதிய தேசிய இணைய அமைப்பை உருவாக்குவதற்காகவும் ஏற்படுத்தப் பட்டுள்ள ஒரு சட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2019 ஆம் ஆண்டு மே 01 அன்று கையெழுத்திட்டார்.
இந்தச் சட்டத்தின் நோக்கமானது நிகழ்நேர (ஆன்லைன்) தகவல் தொடர்புகளைத் தடை செய்வதாகும்.
இலங்கை அதிபர் மைத்திரிபாலா சிறிசேனா முகத்தை மறைக்கக் கூடிய புர்கா, முகத் திரை அல்லது மனிதர்களின் அடையாளத்தை கண்டுபிடிப்பதைத் தடுக்கும் எந்தவொரு பொருளின் மீதும் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
தமது தீவின் கட்டமைப்புக் கட்டுப்பாடுகள் மற்றும் புவி வெப்பமயமாதல் காரணமாக இந்தோனேஷியாவின் தலைநகரை ஜகர்த்தாவிலிருந்து ஜாவா தீவின் நெரிசலான பகுதிகளுக்கு அப்பால் இடம் மாற்றி அமைக்க அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ திட்டமிட்டுள்ளார்.
இந்திய நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தைக் குறிக்கும் எல்லோராக் குகையின் உருவத்தை தன் பின்புறத்தில் கொண்ட புதிய 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட விருக்கின்றன. இந்த நோட்டுகளின் அடிப்படையான வண்ணம் பசுமை கலந்த மஞ்சளாகும்.
இது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரான சக்தி காந்த தாஸ் என்பவரால் கையெழுத்திடப்பட விருக்கின்றது.
வெளிநாட்டு நெகிழிக் கழிவுப் பொருட்களின் இறக்குமதி மீதான சீன அரசின் தடையானது சர்வதேச நெகிழிப் பொருட்கள் மறுசுழற்சி தொழிற்சாலைகள் மற்றும் நெகிழிக் கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துதல் ஆகியவற்றைப் பாதித்துள்ளது.
வளர்ந்த நாடுகள் தங்களது நெகிழிக் கழிவுப் பொருட்களை தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் கொட்டுவதற்குத் தீர்மானித்துள்ளன.
இந்திய மருத்துவ ஆணையமானது எம்பிபிஎஸ் படிப்பிற்குப் புதிய பாடத் திட்ட வரைவைத் தயாரித்துள்ளது. இந்தப் புதிய பாடத் திட்டமானது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து செயல்பாட்டுக்கு வரவிருக்கின்றது.
எம்பிபிஎஸ் படிப்பிற்கான பாடத் திட்டமானது 21 ஆண்டுகளுக்குப் பின்பு தற்பொழுது திருத்தியமைக்கப் படுகின்றது.
வாக்காளர்களால் கையெழுத்திடப்பட்ட “திரும்பப் பெறும் மனுவின்” வெற்றியைத் தொடர்ந்து பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஐக்கிய இராஜ்ஜியத்தின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக பியோனா ஒனாசன்யா உருவெடுத்துள்ளார்.
தண்டனைக்குள்ளான பாராளுமன்ற உறுப்பினரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு பதிவு செய்யப்பட்ட தகுதியான வாக்காளர்களில் 10 சதவீதம் பேர் திரும்பப் பெறும் மனுவில் கையெழுத்திட வேண்டும்.
தன்னிச்சையாக இயங்கும் ஒரு கூட்டரசு ஆணையமான சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் அறிக்கையின்படி, “2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் மதச் சுதந்திர நிலையானது ஒட்டுமொத்த சரிவைக் கண்டுள்ளது” என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.