பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை (Corporate Social Responsibility - CSR) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக எல்ஐசி வீட்டுவசதி நிதியியல் நிறுவனம், லோக் பாரதி என்ற கல்வி நிறுவனத்துடன் இணைந்து “உதயம்” என்று பெயரிடப்பட்ட ஒரு திறனளிக்கும் மையத்தை பெங்களூருவில் தொடங்கியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் குழுமமானது (International Cricket Council - ICC) ஒரு விரிவுபடுத்தப்பட்ட ஆண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் சர்வதேசத் தரவரிசையை வெளியிட்டிருக்கின்றது. இந்தத் தரவரிசையில் மொத்தம் 80 அணிகள் பங்கு பெற்றுள்ளன.
சமீபத்திய பட்டியலில் இந்தியா 260 புள்ளிகளுடன் மூன்று இடங்கள் பின்தங்கி 5-வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.
2019 ஆம் ஆண்டு மே 02 ஆம் தேதியின்படி இந்தியாவில் உள்ள முக்கியமான 91 நீர்த் தேக்கங்களின் நீர் சேமிப்பு அளவானது 40.592 BCM ஆக உள்ளது என்று மத்திய நீர் வளத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த அளவானது இந்த நீர்த் தேக்கங்களின் மொத்த சேமிப்புத் திறனில் 25 சதவிகிதம் மட்டுமே ஆகும்.
சர்வதேசத் தரவுக் கழகத்தின் (International Data Corp) புள்ளியியல் அறிக்கையின்படி சீனாவைச் சேர்ந்த மின்னணு பெருநிறுவனமான ஹுவாய் ஆனது உலகளவில் திறன் பேசி விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, இந்தியாவிற்கு கச்சா எண்ணெயை அளிக்கும் முன்னணி நாடாக ஈராக் உருவெடுத்திருக்கின்றது.
2018-19 ஆம் நிதியாண்டில் இந்தியக் கச்சா எண்ணெய்த் தேவையில் 5-ல் ஒரு பங்குக்கும் மேற்பட்ட எண்ணெயை ஈராக் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கின்றது (46.61 மில்லியன் டன்கள்).
இந்தியக் கப்பற்படைக்காக குறைந்த ஆழத்தில் பயணிக்கக் கூடிய 8 நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல்களை (ASWSWC - Anti-Submarine Warfare Shallow Water Crafts) கட்டமைப்பதற்காக ரூபாய் 6,000 கோடி மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தை கொல்கத்தாவைச் சேர்ந்த “கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் இன்ஜீனியர்ஸ்” என்ற நிறுவனத்திற்கு மத்தியப் பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது.
இந்தக் கப்பல்கள் கடலில் உள்ள நிலத்தடி இலக்குகளைத் தடுத்து அவற்றைத் தாக்கி அழிக்கும் திறன் பெற்றிருக்கும்.
நோபல் இலக்கியப் பரிசை வழங்கும் ஸ்வீடன் நிறுவனமானது பேராசிரியர் மேட்ஸ் மால்ம் என்பவரைத் தனது புதிய நிரந்தர செயலாளராக நியமித்துள்ளது. இவர் 2018 மற்றும் 2019 ஆகிய இரு ஆண்டுகளுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசினை அறிவிக்கும் குழுவின் தலைவராக இருக்கின்றார்.
கடந்த 70 ஆண்டுகளில் முதல்முறையாக 2018 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை.
நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான பந்தானா நேபாள் என்ற ஒரு பெண் தொடர்ந்து 126 மணி நேரங்கள் நடனமாடி, “ஒரு தனிப்பட்ட நபரின் நீண்ட நேர நடன மராத்தான்” என்ற பிரிவில் உலக கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கின்றார்.
2011 ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த கலாமண்டலம் ஹேம்லதா என்பவர் நிகழ்த்திய சாதனையை இவர் முறியடித்திருக்கின்றார். ஹேம்லதா 123 மணி நேரம் 15 நிமிடங்கள் தொடர்ந்து நடனமாடி சாதனை நிகழ்த்தியிருந்தார்.
தேசியத் தூய்மை கங்கைத் திட்டத்தின் (National Mission for Clean Ganga - NMCG) இணையதளம் மீதான ஒரு அறிக்கையின்படி, 2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு நமாமி கங்கை திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 100 கழிவுநீர் கட்டமைப்புத் திட்டங்களில் 10 திட்டங்களை மட்டுமே மோடி தலைமையிலான அரசு நிறைவு செய்துள்ளதாகக் கூறியுள்ளது.
தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயமானது (National Company Law Appellate Tribunal - NCLAT) ஐஎல்&எப்எஸ் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடன் தொகையை குறித்த காலத்திற்குள் செலுத்தாமல் இருப்பின் அவர்களது வங்கிக் கணக்குகளை வாராக் கடன்களாக (NPA - non-performing assets) அறிவிப்பதற்கு வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
கடனாக அல்லது முன்தொகையாகக் கொடுக்கப்பட்டிருக்கும் நிதியின் அசல் அல்லது வட்டித் தொகை தொடர்ந்து 90 நாட்களாக செலுத்தப்படாமல் இருப்பின் அவை வாராக் கடன் எனப்படும்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவைகள் வரி வசூலானது எப்பொழுதும் இல்லாத அளவுக்கு ரூ. 1.13 இலட்சம் கோடியை எட்டியுள்ளது.
மார்ச் மாதத்தில் அரசாங்கமானது 1.06 இலட்சம் கோடியை வசூலித்துள்ளது.
இந்திய பாரத வங்கியானது சேமிப்பு கணக்கு மற்றும் குறுகிய காலக் கடன்கள் மீதான தனது வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்துடன் இணைத்துள்ளது.
1 இலட்சத்திற்கும் குறைவாக உள்ள சேமிப்புக் கணக்கிற்கான வட்டி விகிதம் 3.5 சதவிகிதமாகும். 1 இலட்சத்திற்கும் அதிகமாக உள்ள சேமிப்புக் கணக்கிற்கான வட்டி விகிதம் 3.25 சதவிகிதமாகும்.