சமீபத்தில் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ரைசாட்-2பி செயற்கைக் கோளில், மிகவும் சிக்கலான ரேடியல் ரிப் (வட்டவடிவிலான விலா எலும்பு) அலைவாங்கியானது செயற்கைக் கோளிடமிருந்து வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டு சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
செயற்கைக் கோள் ஏவுதலின் போது 3.6 மீட்டர் கொண்ட இந்த அலைவாங்கி மடித்து வைக்கப்பட்டுப் பின்னர் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டு சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இது உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் இஸ்ரோவினால் 13 மாத காலத்தில் தயாரிக்கப்பட்டதாகும். ஆனால் பொதுவாக இதைக் கட்டமைக்க 3 முதல் 4 ஆண்டுகள் ஆகும்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 73-ன் கீழ் தங்களால் வழங்கப்பட்ட அறிவிக்கையின் நகலை இந்தியத் தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தது.
பிரிவு 73 ஆனது மக்களவைக்கான பொதுத் தேர்தலின் முடிவுகள் மற்றும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் ஆகியவற்றை வெளியிடுதலைப் பற்றிக் கூறுகின்றது. இந்த அறிவிக்கைக்குப் பின்பு சபை அல்லது அவை அதிகாரப் பூர்வமாக அமைக்கப்படும்.
இந்திய அரசியலமைப்பின் சரத்து 75(1)-ன் கீழ், தன்னிடம் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் இந்தியாவின் பிரதமராக மோடியை நியமித்தார்.
மத்திய அமைச்ரவையில் உறுப்பினர்களாக நியமிக்கப் படுபவர்களின் பெயர்கள் குறித்து ஆலோசனை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் இராம்நாத் கோவிந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
அஸ்ஸாம் ரைபில்ஸின் ஒரு படைப் பிரிவு தேசியப் பேரிடர் பதிலெதிர்ப்புப் படையாக National Disaster Response Force (NDRF) மாற்றப்பட்டு செயல்படுவதற்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, இந்தப் படைப் பிரிவு ஜம்மு காஷ்மீரில் விரைவில் செயல்படவிருக்கின்றது.
அஸ்ஸாம் ரைபில்ஸ் படை இராணுவத்திலிருந்து வரும் அதிகாரிகளைக் கொண்டுள்ளது. இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
மின்னணு மற்றும் மின்சார தானியங்குச் சாதனங்களைத் தயாரிக்கும் பிளாஷ் எலக்ட்ரானிக்ஸ் இந்தியா என்ற நிறுவனம் இரு சக்கர வாகனத் தயாரிப்பாளரான ராயல் என்பீல்டு என்ற நிறுனத்தின் மீது காப்புரிமை மீறல் வழக்கு ஒன்றை அமெரிக்காவில் தொடுத்துள்ளது.
“ஒழுங்குபடுத்தும் - திருத்தும்” பொருள் (regulator-rectifier) என்ற ஒரு முக்கியமான பொருளின் உற்பத்தியில் காப்புரிமை மீறப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இது உந்துவண்டி இயந்திரங்களில் உற்பத்தி செய்யப்படும் ஏசி மின்னழுத்தத்தை உந்து வண்டியில் முழுவதுமுள்ள மின் அமைப்புகளை இயக்குவதற்காக டிசி (DC Voltage) மின்னழுத்தமாக மாற்றுகின்றது.