நிலத்தடி நீர் மேலாண்மை தொடர்பாக ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்திலிருந்து இறுதி ஒழுங்குமுறை அனுமதியை குஜராத்தைச் சேர்ந்த அதானி குழுமம் பெற்றுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் விமர்சனத்திற்குள்ளான தனது கார்மிச்சல் நிலக்கரி சுரங்கத் திட்டம் மீதான பணியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பெருந் தடுப்புப் பவளத் திட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்துதல் மற்றும் அதிகப்படியான கார்பன் உமிழ்வுகள் ஆகியவை இத்திட்டத்திற்கு எதிராக எழுப்பப்பட்ட விமர்சனங்களாகும்.
புதிதாகப் பதவியேற்றுள்ள மோடி அரசு, தொலைத் தொடர்பு அலைவரிசையின் மிகப் பெரிய அளவிலான ஏலத்திற்குத் திட்டமிட்டுள்ளது. இந்த ஏலத்தின் மூலம் ஏறத்தாழ ரூ. 6 லட்சம் கோடி நிதியைத் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இது கிராமப்புறப் பகுதிகளில் இழையிலிருந்து வீட்டிற்கு இணைய வசதியை அளித்தல் உள்ளிட்ட ஐந்தாம் தலைமுறை சேவைகளை மலிவு விலையில் அறிமுகப்படுத்தவிருக்கின்றது.
மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சரான பிரகலாத் சிங் படேல், “அஸ்தித்வா : பிரபாகர் பார்வேயின் சாராம்சம்” என்ற ஒரு கண்காட்சியை புது தில்லியில் உள்ள தேசிய நவீனக் கலைக் கூடத்தில் தொடங்கி வைத்தார்.
1976 ஆம் ஆண்டு லலித் கலா விருது பெற்றவரான பிரபாகர் பார்வே என்பவர் நவீன இந்திய ஓவியத்தின் முன்னோடியாக விளங்கினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான செயல்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக அரியானாவின் குருகிராமில் ஸ்வீப் (Systematic Voters’ Education and Electoral Participation program) என்ற திட்டத்திற்கான பிரத்தியேக அதிகாரிகளுக்கான இரண்டு நாட்கள் கருத்தரங்கானது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டது.
வாக்காளர்களுக்கான முறைசார்ந்த கல்வி மற்றும் தேர்தல் பங்கெடுப்புத் திட்டம் (Systematic Voters’ Education and Electoral Participation program - SVEEP) என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் திட்டமாகும்.
கம்போடியாவின் தகவல் துறை அமைச்சகம் மற்றும் ஒளிபரப்பு வளர்ச்சிக்கான ஆசிய-பசிபிக் நிறுவனம் (AIBD - Asia-Pacific Institute for Broadcasting Development) ஆகியவை இணைந்து 2019 ஆம் ஆண்டின் 16-வது ஆசிய ஊடக மாநாட்டை கம்போடியாவின் சியேம் ரீப் மாகாணத்தில் நடத்தின.
போலிச் செய்திகளைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை கண்டறிவதற்காக ஓராண்டு கால அளவுடைய ஒரு ஆராய்ச்சித் திட்டமான ”அங்கோர் போலிச் செய்திகள் முன்னெடுப்பு’ என்ற ஒரு திட்டமும் அப்போது தொடங்கப்படவிருக்கின்றது.
கிர்கிஸ்தானின் தலைநகரான பிஷ்கெக்கில், அந்நாட்டின் உயரிய விருதான “முதலாவது பிரிவின் மானஸ் ஆணை” என்ற பட்டம் சீன அதிபர் சி ஜின்பிங்கிற்கு வழங்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டின் ஜுன் 14 ஆம் தேதியில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்” மாநாட்டை கிர்கிஸ்தான் நடத்திக் கொண்டிருக்கின்றது.
ஹரியானாவின் குருகிராமில் இந்தியக் கடற் பிராந்தியத்தின் தகவல் பிணைப்பு மையத்தின் கீழ் “2019 ஆம் ஆண்டின் கடல்சார் தகவல் பகிர்வுப் பயிலரங்கத்தை” இந்தியக் கடற்படை நடத்தியது.
இரண்டு நாட்கள் நடைபெறக்கூடிய இந்தப் பயிலரங்கம் கடற்படை அதிகாரிகளுக்கான துணைத் தலைவர் மற்றும் கடற்படை துணைத் தளபதியான எம்எஸ் பவார் என்பவரால் தொடங்கி வைக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் (UNICEF - United Nations International Children’s Fund) அமெரிக்கப் பிரிவினால் அதன் பனித் திவலைப் பந்து நிகழ்வின் போது (Snowflake Ball) அந்த அமைப்பின் டேனி காயே மனித நேய விருதானது நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு வழங்கப்படவிருக்கின்றது.
UNICEF அமைப்பானது இரண்டாம் உலகப் போரின் போது பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு நிவாரண உதவிகளை அளிப்பதற்காக 1946 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைமையகம் நியூயார்க்கில் அமைந்துள்ளது.
பயனாளியின் அந்தரங்கததை மீறக்கூடிய ஒரு கட்செவிப் பிழையைக் கண்டறிந்ததற்காக, 2019 ஆம் ஆண்டின் முகநூல் வாழ்த்தரங்கில் (ஹால் ஆப் பேம்) மணிப்பூரைச் சேர்ந்த ஒரு கட்டிடப் பொறியாளரான சோனெல் சவ்காய்ஜாம் என்பவர் இணைந்துள்ளார்.
கட்செவி வழியாக பேச்சுத் தொடர்பின் போது இந்தப் பிழையானது அடுத்த முனையில் உள்ளவரின் அனுமதி மற்றும் தகவல் எதுவும் பெறாமலே அந்தப் பேச்சுத் தொடர்பை காணொளித் தொடர்பாக மாற்றுகின்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்ற அமீரக மறுசுழற்சி விருதுகளின் 22-வது பதிப்பின் போது “மறுசுழற்சி விருதுகளின் சுற்றுச்சூழல் வெற்றியாளர்கள்” என்ற விருது 8 வயது நிரம்பிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியா டோனி என்பவருக்கு வழங்கப்பட்டது.
மொத்தம் 14,914 கிலோ கிராம் அளவுள்ள காகிதக் கழிவுகளைச் சேகரித்ததற்காகத் தனிநபர் பிரிவின் காகிதப் பிரிவில் இவர் இந்த விருதை வென்றுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI - Reserve Bank of India) கானா மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு விவசாயம் மற்றும் இரயில்வேத் திட்டங்களுக்கு 245 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான கடனை இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி வழங்கும் என்ற அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
போர்ப்ஸ் பத்திரிக்கையினால் தொகுக்கப்பட்ட “உலகின் மிகப்பெரிய 2000 பொது நிறுவனங்களின்” பட்டியலில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் தொழிற் நிறுவனமானது இந்திய அளவில் முதலாவது இடத்திலும் சர்வதேச அளவில் 71-வது இடத்திலும் உள்ளது.
இந்த சர்வதேசப் பட்டியலில் தொடர்ந்து 7-வது முறையாக சீன தொழிற்துறை மற்றும் வணிக வங்கி முதலிடத்தில் உள்ளது.