தென்கொரியாவில் நடைபெற்ற 23வது புச்சியோன் சர்வதேச சிறப்பு வாய்ந்த திரைப்பட விழாவில் இந்தியத் திரைப்படமான “கல்லி பாய்” என்ற திரைப்படத்திற்கு சிறந்த தேசிய திரைப்படத்திற்கான நெட்பாக் (NETPAC - Network for the Promotion of Asian Cinema - ஆசிய சினிமாவை மேம்படுத்துவதற்கான அமைப்பு) எனும் விருது வழங்கப்பட்டது.
சோயா அக்தர் இயக்கிய இப்படமானது இந்தியாவின் அடிமட்ட ராப் பாடல் இயக்கத்தினைப் பற்றியது. மேலும் இது மும்பையின் தெரு ராப் பாடகர்களான விவியன் பெர்னாண்டஸ் (அகா டிவைன்) மற்றும் நவேத் ஷேக் (அகா நெய்ஸி) ஆகியோரின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு எடுக்கப்பட்ட படமாகும்.
இந்தியாவின் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் டாக்டர் ஹமீத் நூரு மற்றும் மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் ஆகியோர் இணைந்து “மாற்றத்திற்கான 50 ஆண்டு கால கூட்டிணைவு” எனும் புத்தகத்தை வெளியிட்டனர்.
பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கான முயற்சிகளில் இந்தியா அடைந்த முக்கிய மைல்கற்களையும் இந்தியாவுக்கு ஆதரவாக உலக உணவுத் திட்டம் ஆற்றிய பங்கையும் இது காட்டுகிறது.
சொத்து ஆலோசனை நிறுவனமான CBRE நிறுவனத்தின் ஆய்வின்படி புதுடெல்லியின் கெனாட் பிளேஸ் ஆனது உலகின் 9-வது மிக விலையுயர்ந்த அலுவலக இடமாகும்.
பிரதான அலுவலக வாடகைகளுக்கான உலகில் மிக விலையுயர்ந்த சந்தையாக ஹாங்காங்கின் மத்திய மாவட்டம் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
2020 ஆம் ஆண்டு முதல் விமான பயணச்சீட்டுகளில் 18 யூரோக்கள் வரை பசுமை வரியாக பிரான்ஸ் நாடு விதிக்கவுள்ளது. இது குறைவாக மாசுபடுத்தும் போக்குவரத்து திட்டங்களுக்கு நிதியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2018 ஆம் ஆண்டிலிருந்து ஸ்வீடன் நாடானது காலநிலை பாதிப்பைக் குறைக்க விமானப் பயணங்களில் 40 யூரோக்கள் வரை இதே போன்ற வரியை விதித்து வருகிறது.
தன் மாநிலத்தில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களைப் பொருளாதார ரீதியாக ஆதரிப்பதற்காக அவர்களுக்கு மாதந்தோறும் 10000 ரூபாய் பண உதவி வழங்க ஒடிசா மாநிலம் முடிவு செய்துள்ளது.