அஜர்பைஜான் மற்றும் தஜிகிஸ்தான் - மலேரியா இல்லாத நாடுகள்
April 7 , 2023 600 days 322 0
உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது, அஜர்பைஜான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளை மலேரியா இல்லாத நாடுகள் என்று அறிவித்துச் சான்றளித்துள்ளது.
இந்தச் சான்றிதழானது, இந்த இரு நாடுகளிலிருந்து மலேரியா நோயினை முற்றிலுமாக அழிப்பதற்காக அந்நாடுகள் மேற்கொண்ட நூற்றாண்டு காலத் தொடர் முயற்சியைத் தொடர்ந்து கிடைக்கப் பெற்றுள்ளது.
மலேரியா ஒழிப்புச் சான்றிதழானது, ஒரு நாட்டில் மலேரியா நோய் இல்லாத நிலையை உலக சுகாதார அமைப்பானது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாகும்.
இந்த நிலையினை எய்துவதற்காக, அனோபிலிஸ் வகை கொசுக்களால் பரவும் மலேரியாவின் தொற்றுச் சங்கிலியானது, குறைந்தது மூன்று ஆண்டுகளாக நாடு முழுவதும் தடுக்கப்பட்டது.
உள்நாட்டில் பரவும் பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் (பி.வைவாக்ஸ்) மலேரியாவின் கடைசிப் பாதிப்பானது அஜர்பைஜான் நாட்டில் 2012 ஆம் ஆண்டிலும், தஜிகிஸ்தான் நாட்டில் 2014 ஆம் ஆண்டிலும் பதிவானது.
இந்த அறிவிப்பின் மூலம், மொத்தம் 41 நாடுகளும் 1 பிரதேசமும் மலேரியா இல்லாத நாடுகள் என்ற உலக சுகாதார அமைப்பின் சான்றிதழினைப் பெற்றுள்ளன.
இதில் இடம் பெற்றுள்ள 21 நாடுகள் ஐரோப்பியப் பிராந்தியத்தைச் சேர்ந்தவை ஆகும்.