‘அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II’ திட்டத்தினை அமல்படுத்தச் செய்வதற்காக 1,087 கோடி ரூபாய் நிதி ஒதுக்க தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது.
2025-26 ஆம் ஆண்டில் கிராமப் புறங்களில் அடிப்படை உள்கட்டமைப்பை மிக நன்கு மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்தத் திட்டம் ஆனது ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையால் அமல் படுத்தப் படுகிறது.
2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் ஆனது, அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் உள்ள ஒட்டு மொத்த அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளைப் படிப்படியாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்னெடுப்பின் கீழ், குளங்களைப் புனரமைத்தல், தெருக்கள் மற்றும் சாலைகளை நன்கு மேம்படுத்துதல், புதிய தெரு விளக்குக் கம்பங்களை நிறுவுதல், வாழ்வாதாரம் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்நாட்டில் 12,482 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன.
2025-26 ஆம் ஆண்டில், இந்தத் திட்டம் ஆனது 2,329 கிராமப் பஞ்சாயத்துகளில் செயல் படுத்தப்பட உள்ளது.
ஒரு கிராமப் பஞ்சாயத்தில் மேற்கொள்ளப் பட வேண்டிய பல பணிகளைத் தொகுதி அளவிலான குழுக்கள் முடிவு செய்யும்.
அந்தத் தேர்வுக் குழுவால் பட்டியலிடப்பட்ட அனைத்துப் பணிகளும் சிறப்புக் கிராம சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
பட்டியலிடப்பட்ட சாதியினர்/பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கு குறைந்தபட்சம் 30% நிதி ஒதுக்கப்பட வேண்டும்.