அரிசி கொள்முதலுக்கான மானிய வரம்பு மீறல் மீதான நடவடிக்கை தடுப்பு விதி
April 14 , 2024 227 days 227 0
இந்திய அரசானது, 2022-23 ஆம் ஆண்டின் (அக்டோபர்-செப்டம்பர்) சந்தைப்படுத்தல் காலகட்டத்திற்காக ஐந்தாவது முறையாக உலக வர்த்தக அமைப்பில் (WTO) நெல் கொள்முதலுக்கான மானிய வரம்பு மீறல் மீதான நடவடிக்கை தடுப்பு விதியை செயல் படுத்தியுள்ளது.
இந்தியாவில் நெல் கொள்முதலுக்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிர்ணயிக்கப் பட்ட மானிய வரம்பு மீறப்பட்டதே இதற்குக் காரணம் ஆகும்.
2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவின் அரிசி உற்பத்தியின் மதிப்பு சுமார் 52.8 பில்லியன் டாலராக இருந்த நிலையில், அந்த ஆண்டில் விவசாயிகளுக்கு 6.39 பில்லியன் டாலர் மதிப்பிலான மானியம் வழங்கப்பட்டது.
அதாவது அரிசி மீதான மானியம் ஆனது அதன் உற்பத்தி மதிப்பில் 12 சதவீதமாக இருந்தது என்ற நிலையில் இதன் மூலம் 10 சதவீதம் என்ற உள்நாட்டு மானிய வழங்கலுக்கான உச்ச வரம்பு மீறப்பட்டது.
இருப்பினும், 2013 ஆம் ஆண்டில் WTO அமைப்பின் பாலி அமைச்சர்கள் சபையில் ஒப்புக் கொள்ளப் பட்ட "நெல் கொள்முதலுக்கான மானிய வரம்பு மீறல் மீதான நடவடிக்கை தடுப்பு விதி- சமாதான விதியை" இந்தியா செயல்படுத்தியதால், அந்த மீறலுக்கு உடனடி நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
இது வளர்ந்து வரும் நாடுகளில் கோதுமை மற்றும் அரிசி கொள்முதலுக்கான உச்ச வரம்பை மீறுவதால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இருந்து, அத்தகையப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் வரையில் அவற்றிற்குப் பாதுகாப்பு வழங்குகிறது.