மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களை மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தளமாக அறிவித்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.
அரிட்டாபட்டி கிராமத்தில் அமைந்த (மேலூர் தொகுதி) 139.63 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு மற்றும் மீனாட்சிபுரம் கிராமத்தில் (மதுரை கிழக்குத் தாலுக்கா) அமைந்த 53.8 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு ஆகியவை அரிட்டாபட்டி பல்லுயிர்ப் பாரம்பரியத் தளமாக அழைக்கப் படும்.
சுற்றுச்சூழல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப் படுகிற அரிட்டா பட்டி கிராமமானது, கரும்பழுப்பு ராசாளி, இராசாளி மற்றும் போனெல்லி கழுகு ஆகிய மூன்று முக்கிய ஊண் உண்ணிகள் உட்பட சுமார் 250 வகையான பறவைகளைக் கொண்டுள்ளது.
இது இந்திய எறும்புத் திண்ணி, தேவாங்கு மற்றும் மலைப்பாம்புகள் போன்ற வன விலங்குகளின் உறைவிடமாகவும் உள்ளது.
இப்பகுதி ஏழு மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள ஒரு குன்று போல அல்லது ஒரு நீர்ப் பிடிப்புப் பகுதியாகச் செயல்படுகிறது.
16 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஆனைகொண்டான் குளம் இங்கு அமைந்துள்ளது.
பல்வேறு பெருங்கற்கால கட்டமைப்புகள், குடைவரைக் கோயில்கள், தமிழ் பிராமியக் கல்வெட்டுகள் மற்றும் சமணப் படுக்கைகள் இந்தப் பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றன.