‘அறிவுசார் சொதுரிமைகளைப் பற்றி பேசுவோம்’ - சமூக ஊடகப் பிரச்சாரம்
September 5 , 2017 2671 days 1050 0
அறிவுசார் சொத்துரிமைகளின் (Intellectual Property Rights) முக்கியத்துவத்தைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்திய புவிசார் குறியீடுகளை மேம்படுத்தவும் ‘அறிவுசார் சொத்துரிமைகளைப் பற்றி பேசுவோம் ‘ (#LetsTalkIP) என்ற பெயரில் சமூக ஊடக பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது .
பிரச்சாரத்தினை செயல்படுத்துபவர்கள் :
அறிவுசார் சொத்துரிமைகள் ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Cell for IPR Promotions & Management - CIPAM), தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை.
இந்த அமைப்பு வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது .
புவிசார் குறியீடு (Geographical Indication or a GI) என்பது ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ ( எ.கா. நகரம், வட்டாரம், நாடு ) குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் ஆகும்.
இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும். இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்தியாவின் செழிப்பான கலாச்சாரம் மற்றும் அறிவார்ந்த பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துரைப்பதால் புவிசார் குறியீடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் அதன் நிலப் பகுதிக்கேற்ப தனித்தனி பண்புகள், அடையாளங்கள் கொண்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பகுதிசார் பொருள்களின் விளைச்சல், அப்பகுதி மக்களின் தொழில்கள் மூலம் அப்பகுதி இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழ்கின்றன.
புவிசார் குறியீடுகள் , ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ திட்டத்தின் ஒரு பகுதியாக ஊக்குவிக்கப்படுகின்றன.
புவிசார் குறியீடுகள் அங்கீகாரத்தைப் பெறும் பொருட்கள் உலக அளவில் பிரபலம் அடைவதால் அவற்றை உருவாக்கும் கைவினைஞர்கள், விவசாயிகள், மற்றும் நெசவாளர்கள் இதன் மூலம் அதிக பயன் அடைவார்கள்.
பொருட்களை உருவாக்குவதில் கிராமப்புற கைவினைஞர்கள் பிரத்யேகமான பாரம்பரியத் திறன்களையும் சிறந்த வழிமுறைகளைப் பற்றிய அறிவினையும் பெற்றுள்ளனர். பல தலைமுறைகளின் வழி கற்றுவந்த இத்தகையத் திறன்களைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் ‘புவிசார் குறியீடுகள்’ வழிவகை செய்கின்றன.