மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு “IP நானி” எனும் அறிவுசார் சொத்துரிமைக்கான சின்னத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இந்த சின்னமானது, புதுதில்லியில் நடைபெற்ற தேசிய அறிவுசார் சொத்துரிமைக் கொள்கை மீதான மாநாட்டின் போது தொடங்கப்பட்டது.
இக்கொள்கையின் முதல் மற்றும் முக்கிய நோக்கமானது “அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights - IPR) விழிப்புணர்வு: சென்றடைதல் மற்றும் உயர்வு” என்பதாகும்.
மிக இளம்வயதிலேயே படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான திறன்களை பள்ளிக் குழந்தைகளிடையே வளர்ப்பதற்காக IPR மீதான விழிப்புணர்வை அதிகப்படுத்துவதை இக்கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வகையில் IPR மேம்பாடு மற்றும் மேலாண்மைக்கான மையம் “IP நானி” சின்னத்தை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு அனிமேஷன் வீடியோக்களை குழந்தைகளுக்காகத் தயாரித்துள்ளது. IPR மேம்பாடு மற்றும் மேலாண்மைக்கான மையம் (CIPAM - Cell for IPR Promotion and Management) ஆனது தொழிலகக் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் (DIPP) கீழ் செயல்படும் ஒரு தொழில்முறை அமைப்பாகும்.
இவ்வகையிலான ஊக்கம் தரும் வீடியோக்களை உருவாக்குவதற்காக CIPAM ஆனது, ஐரோப்பிய யூனியனின் IP அலுவலகத்துடன் கூட்டிணைந்துள்ளது.