மாலத்தீவு அதிபரான அப்துல்லா யாமீன் மாலத்தீவில் 15 நாள் தேசிய நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் அரசால் 2015 ஆம் ஆண்டு முன்னாள் அதிபரான நசீத் மற்றும் அவரது முக்கிய ஆதரவாளர்களான 9 பேர் தீவிரவாத தொடர்பு, ஊழல், கொலை சதி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டு 13 ஆண்டு காலத்திற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டனர்.
கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக நஷீத் வெளிநாடுகளில் புகலிடம் பெற்று (Exile) வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் முன்னாள் அதிபர் முகமது நசீர் உள்பட 9 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்த மாலத்தீவு உச்சநீதிமன்றம், 9 பேரையும் விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது..
விடுதலை செய்வது தொடர்பான உத்தரவை ஏற்க மறுத்துள்ள அதிபர் யாமீன் தற்போது நெருக்கடி நிலையை பிரகடனப் படுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி மொத்தம் 85 இடங்களை கொண்ட மாலத்தீவு பாராளுமன்றத்தின் அதிபர் யாமீனின் மாலத்தீவு முன்னேற்ற கட்சியைச் சேர்ந்த 12 எம்பிக்கள் அதிபருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அந்த 12 பேரையும் யாமீன் அரசு தகுதி நீக்கம் செய்தது.
அரசின் இந்த செயல்பாட்டையும் சட்டப்பூர்வமாக செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
12 அதிருப்தி எம்பிக்களும் எதிர்த்தரப்பில் இணைந்தால் அதிபர் பதவி நீக்கம் செய்யப்படுவது உறுதி என்பதால் யாமீன் நாடாளுமன்றம் நடைபெறுவதையும் முடக்கியுள்ளார்.
மேலும் யாமீன் அரசு இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் கைது செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தீவு முழுவதும் 15 நாள் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் யாமீனின் ஒன்றுவிட்ட சகோதரரும் (Half-Brother) முன்னாள் அதிபருமான மவ்மூன் அப்துல் கையூமும் கைது செய்யப்பட்டுள்ளார்.
2008 ஆம் ஆண்டு ஜனநாயக முறையிலான மாலத்தீவு அரசு அமைக்கப்படும் வரை சுமார் 30 ஆண்டுகாலம் மவ்மூன் அப்துல் கையூம் மாலத்தீவின் அதிபராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முகம்மது நசீத் ஜனநாயக மாலத்தீவின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராவார்.
மாலத்தீவில் தற்போது இரண்டாவது முறையாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன் 2015-ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.