தென்கொரியா நாட்டில் டோங்ஹே நகரில் (Donghae City) நடைபெற்ற ஐந்தாவது பெண்கள் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் டிராபி போட்டியின் இறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் நாடான தென்கொரியா நடப்பு சாம்பியனான இந்திய மகளிர் ஹாக்கி அணியை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.
இந்த இறுதி ஆட்டமானது இந்தியாவிற்கு இத்தொடரின் முதல் தோல்வியாகும். இதனோடு தென்கொரியா மொத்தம் 3 முறை ஆசிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. இதற்கு முன் 2010 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் தென்கொரியா இந்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
இச்சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இரண்டாவது முறையாக 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த ஆசிய ஹாக்கி பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியின் 2013-ஆம் ஆண்டின் பதிப்பில் இறுதி ஆட்டத்தில் ஜப்பானிடம் வெற்றியை நழுவவிட்டு இந்தியா 2-வது இடத்தைப் பிடித்தது.
இந்திய ஸ்டிரைக்கரான வந்தனா கடாரியா இச்சாம்பியன்ஷிப் தொடரின் சிறந்த வீரராக (player of the tournament) அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்தியாவின் இளைய வீராங்கனையான லால்ரேம் சியாமி இச்சாம்பியன்ஷிப் தொடரின் வளர்ந்து வரும் வீரராக (upcoming player of the tournament) அறிவிக்கப்பட்டுள்ளார்.