சமீபத்தில் கிர் வனப் பகுதியில் ஆசியச் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக குஜராத் மாநில வனத்துறை அறிவித்துள்ளது.
இங்கு 2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி 523 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை தற்போது 2020 ஆம் ஆண்டில் 674 ஆகப் பதிவாகி உள்ளது.
கடைசியாக 2015 ஆம் ஆண்டில் பதிவான கணக்கெடுப்பிலிருந்து தற்போது சிங்கங்களின் எண்ணிக்கையானது 29% அளவு அதிகரித்துள்ளது.
இந்த எண்ணிக்கையானது 15வது சிங்கங்கள் கணக்கெடுப்பிற்குப் பதிலாக மேற்கொள்ளப்பட்ட “பூனம் அவ்லோகன்” என்று அழைக்கப்படும் ஒரு எண்ணிக்கை கண்காணிப்பு நடவடிக்கையிலிருந்து கணக்கிடப் பட்டுள்ளது.
பூனம் அவ்லோகன் என்பது ஒவ்வொரு முழு நிலவின் போதும் மேற்கொள்ளப் படும் ஒரு மாதாந்திர உள்ளக நடவடிக்கையாகும்.
வழக்கமான சிங்கக் கணக்கெடுப்பானது 1965 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடத்தப் படுகின்றது.
கடைசியான சிங்கக் கணக்கெடுப்பானது 2015 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
இது 2015 ஆம் ஆண்டில் 22,000 சதுர கிலோ மீட்டர் அளவில் நடத்தப்பட்டது.
இது 2020 ஆம் ஆண்டில், 30,000 சதுர கிலோ மீட்டர் என்ற அளவிற்கு விரிவுபடுத்தப் பட்டுள்ளது.
ஆசியச் சிங்கங்கள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் சிவப்புப் பட்டியலில் அருகிவரும் உயிரினமாகப் பட்டியலிடப் பட்டுள்ளது.
இந்தியாவில், ஆசியச் சிங்கங்கள் வன விலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972 என்ற சட்டத்தின் கீழ் வரும் அட்டவணை 1 என்பதின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
“ஆசியச் சிங்கங்கள் பாதுகாப்புத் திட்டமானது” மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகத்தினால் தொடங்கப் பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 3 நிதியாண்டுக் காலத்திற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
தற்பொழுது இவை கிர் தேசியப் பூங்காவில் மட்டுமே காணப்படுகின்றன.
கிர் தேசியப் பூங்கா குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ளது.
கிர் ஆனது “மால்தாரிஸ்” என்ற பழங்குடியினருடன் தொடர்புடையதாக விளங்குகின்றது.
மால்தாரிஸ் என்பது கிர் வனப் பகுதியில் வாழும் ஒரு சமயம் சார்ந்த ஆயர் குலச் சமூகமாகும்.