மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது கடந்த ஆண்டில் இந்தியாவின் இணைய வெளியில் சுமார் 1300 சமூக ஊடகங்களின் இணையதள முகவரிகளை (URL – Uniform Resource Locator) தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் இணைய வெளியில் உலவும் ஆட்சேபணைக்குரிய உள்ளடக்கங்களை (objectionable content) கையாளுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அரசுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இணைய வெளியில் ஆன்லைனில் பதிவிடப்படும் ஆட்சேபணைக்குரிய உள்ளடக்கங்களை அரசு கையாளுவதற்கு 2000 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act, 2000) மற்றும் இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் (Indian Penal Code – IPC) ஆகியவை வழி அமைத்து தருகின்றன.
ஆட்சேபணைக்குரிய உள்ளடக்கங்களை தடை செய்வது என்பது (Blocking) IT சட்டத்தின் பிரிவு 69A-ன் கீழ் அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஓர் இறையதிகாரமாகும் (sovereign power).