இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (Unique Identification Authority of India-UIDAI) 2016-ஆம் ஆண்டின் ஆதார் திட்டத்தின் (Aadhaar Act, 2016) கீழ், குற்றவியல் விசாரணைகளுக்காக (Criminal Investigation) ஆதார் உயிரியல் தகவல் (Biometric) தரவுகளின் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்படாது எனும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டின் ஆதார் சட்டத்தின் பிரிவு 29-ன் படி, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் சேகரிக்கப்படும் அனைத்து உயிரியல் தகவல் தரவுகளும் ஆதார் அட்டையை தயாரிப்பதற்கான செயல்களுக்கும், ஆதார் அட்டை உடையோரின் அடையாளத்தின் அங்கீகாரத்திற்கும் மட்டுமே பயன்படுத்தப்படும். பிற செயல்களுக்கு பயன்படுத்தப்பட மாட்டாது.
இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆதார் சட்டத்தின் பிரிவு 33-ன் கீழ், சில வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இப்பிரிவின்படி, கேபினேட் செயலாளர் (Cabinet Secretary) தலைமையிலான மேற்பார்வை குழுவின் (Oversight Committee) முன் அனுமதிக்குப் பிறகு மட்டுமே தேசியப் பாதுகாப்பு (National security) உள்ளடங்கிய விவகாரத்தில், ஆதார் உயிரியல் தகவல் தரவுகளின் அணுகலுக்கு அல்லது பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்படும்.