மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற வருவாய் துறையானது (Revenue Department) சீனாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் “ஆப்லோசாக்ஸின்“ (Ofloxacin) எனும் மருந்துப் பொருளின் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை (Anti-dumping duty) விதித்துள்ளது.
சில நோய் தொற்றுகளின் சிகிச்சையில் இந்த ஆப்லோசாக்ஸின் எனும் மருந்துப் பொருள் பயன்படுத்தப்படுகிறது.
பொருள் குவிப்பு தடுப்பு மற்றும் வரி விதிப்பு பொது இயக்குநரின் (Directorate General of Anti-Dumping and Allied Duties -DGAD) பரிந்துரையைத் தொடர்ந்து சீனாவிலிருந்தான “ஆப்லோசாக்ஸின்” இறக்குமதியின் மீது அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பொருள் குவிப்புத் தடுப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்லோசாக்ஸினின் உண்மையான விலைமதிப்பைக் (normal value) காட்டிலும் மிகவும் குறைந்த விலையில் சீனா இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ததன் காரணமாக இந்தியாவில் பொருள் குவிப்பு நிலை (dumping) உண்டானது.
புளுவோராகுயினோலோனேஸ் (fluoroquinolones) எனும் ஆன்டிபயாடிக் குடும்பத்தில் ஆப்லோசாக்ஸின் உள்ளது. நோய் தொற்றுகளை உண்டாக்கக் கூடிய பாக்டீரியாக்களை கொன்று இது செயல்படக்கூடியது.
இறக்குமதி பொருட்கள் மீதான பொருள் குவிப்பு எதிர்ப்பு வரி விதிப்பு இந்தியாவில் மத்திய வர்த்ததக அமைச்சகத்தின் DGAD-ஆல் பரிந்துரைக்கப்படுகின்றது. மத்திய நிதி அமைச்சகம் இதனை அமல்படுத்துகின்றது.
நியாயமான வர்த்தக நடைமுறையை உறுதி செய்வதும், வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு இணையாக உள்நாட்டுத் தயாரிப்பாளர்களுக்கு சந்தையில் உரிய போட்டிச் சூழலை உருவாக்கித் தருவதும் இந்த பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிப்பின் நோக்கமாகும்.