பெருகி வரும் இணைய வழியிலான தரவு திருட்டுகள், மீறல்கள் மற்றும் ஹேக்கர்களின் செயல்பாடுகள் போன்றவற்றிலிருந்து இணைய உலகினை பாதுகாப்பதற்காக உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) இணைய பாதுகாப்பிற்கான உலகளாவிய மையத்தை (Global Centre for Cybersecurity) தொடங்கியுள்ளது.
உலக பொருளாதார மன்றத்தின் கீழ் தன்னாட்சியுடைய அமைப்பாக செயல்பட உள்ள இந்த மையமானது சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் அமைக்கப்பட உள்ளது.
இணைய பாதுகாப்பிற்கு உள்ள சவால்களுக்கு எதிராக உலக நாடுகளின் அரசுகள், வணிக நிறுவனங்கள், இணைய நிபுணர்கள், சட்ட செயலாக்க நிறுவனங்கள் போன்றவை கூட்டிணைவதற்கு முதல் நிலை உலகளாவிய தளத்தை ஏற்படுத்தி தருவதே இம்மையத்தின் நோக்கமாகும்.
உலக பொருளாதார மன்றம்
உலக பொருளாதார மன்றமானது சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பாகும்.
இம்மன்றமானது பொது மற்றும் தனியார் ஒத்துழைப்பிற்கான ஓர் சர்வதேச நிறுவனமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
உலக பொருளாதார மையமானது, சுவிட்சர்லாந்து நாட்டின் கிழக்கு ஆல்ப்ஸ் மலைத் தொடரில் அமைந்துள்ள மலை வாழிட நகரமான டாவோஸில் நடத்தும் புகழ்பெற்ற வருடாந்திர 5 நாள் உலக பொருளாதார குளிர்கால மாநாட்டினால் உலகம் முழுவதும் அறியப்படுகின்றது.