நாட்டில் அதிகரித்து வரும் இணைய தாக்குதல் மற்றும் இணைய மோசடிகளைக் கருத்தில் கொண்டு, 1200 தகவல் தொழிற்நுட்ப அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிப் பணியாளர்களுக்கு முன்னணி தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களோடு இணைந்து இணையப் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கடந்த வாரம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழிற்நுட்ப அமைச்சகமானது ”சைபர் சுரக்ஷித் பாரத் திட்டத்திற்கு” (Cyber Surakshit Bharat Programme) அனுமதி வழங்கியது. இத்திட்டத்தின் கீழ் தலைமைத் தகவல் பாதுகாப்பு அலுவலர்கள், அமைச்சகங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தகவல் தொழிற்நுட்ப அலுவலர்களுக்கு இணையப் பாதுகாப்பு சார்ந்த ஒரு வருட பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இணையப் பாதுகாப்பு மேலாண்மை, இணைய ஆரோக்கிய குறியீட்டுப் பயிற்சி, தரவுகள் மற்றும் பயன்பாடுகள், நாடு முழுவதும் இரு பயன்பாட்டாளர்களுக்கிடையிலான (end-to-end) இணைய பாதுகாப்பிற்கான பயிலரங்கங்கள் மற்றும் இணையப் பாதுகாப்பிற்கான பிற அம்சங்களும் இந்த ஒரு வருட பயிற்சியில் அளிக்கப்பட உள்ளன.