மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பல்வேறு மாநில அரசுகள், இணையத்தில் காணப் படும் சட்டவிரோதமான உள்ளடக்கங்கள் குறித்து தகவல் தெரிவிப்பதற்கு இணையவெளிக் குற்றத் தகவல் தெரிவிப்புத் தன்னார்வலர்களாக சுமார் 54,800 நபர்களைப் பணியமர்த்தியுள்ளன.
இணையவெளிக் குற்ற தகவல் தெரிவிப்பு தன்னார்வலர்கள் கட்டமைப்பு ஆனது, குடிமக்களுக்கு சட்டவிரோதமான உள்ளடக்கம் குறித்து புகாரளிப்பதற்கும், இணைய வெளித் தாக்குதல்களிலிருந்து சாதனங்களைப் பாதுகாத்தலுக்கான நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வினைப் பரப்புவதற்கும், சட்ட அமலாக்கத்திற்கு உதவும் இணைய வெளி நிபுணராகவும் அவர்களைப் பதிவுசெய்ய உதவுகிறது.
22,942 பேர் சட்டவிரோதமான உள்ளடக்கம் குறித்து புகாரளிப்பதற்காக, 22,071 விழிப்பு உணர்வு ஊக்குவிப்பாளர்கள் மற்றும் 9,819 நிபுணர்கள் உட்பட 54,833 இணையவெளிக் குற்ற தகவல் தெரிவிப்பு தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
மாநிலங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள முதன்மைக் காவல் நிலையங்களுடன் இணைக்கப் பட்ட இணையவெளிக் குற்றப் புகார் வலைதளங்கள் ஆனது சராசரியாக, ஒவ்வொரு நாளும் 67,000 அழைப்புகளைப் பெறுகிறது, மேலும், தினசரியாக மக்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் சுமார் 1,500-2,000 போலிக் கணக்குகளை இது வரை பாதுகாப்பு முகமைகள் அடையாளம் கண்டுள்ளன.
2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில், வாட்ஸ்அப் (43,797 புகார்கள்), டெலிகிராம் (22,680), இன்ஸ்டாகிராம் (19,800), பேஸ்புக் (20,766) மற்றும் யூடியூப் (3,882) போன்ற தளங்களில் குறைந்தது 1,10,925 இணையவெளிக் குற்றப் புகார்கள் அளிக்கப் பட்டுள்ளன.