தேசிய பங்கு முதலீட்டு நிறுவனத்தின் அதிகாரியான சுதா பாலகிருஷ்ணன் இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் தலைமை நிதி அலுவலராக (Chief Financial Officer - CFO) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ரிசர்வ் வங்கியின் 12வது செயல்முறை இயக்குநராக 3 ஆண்டுகள் என்ற பதவிக் காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமை நிதி அலுவலர் மத்திய வங்கியின் நிதித் தகவல்களை சமர்ப்பித்தல், கணக்கியல் முறை ஏற்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறைகள் மதிக்கப்படுவதை உறுதி செய்தல் ஆகிய பணிகளுக்கு பொறுப்புடையவர் ஆவார்.
ரிசர்வ் வங்கியின் இருப்பு நிலை அறிக்கை (Balance Sheet) நிர்வகிப்பவர் என்ற பொறுப்பில் அவர் இவ்வங்கியின் இந்திய மற்றும் அந்நிய முதலீடுகளையும் மேற்பார்வையிடுவார்.
சுதா பாலகிருஷ்ணன் அரசின் வங்கிக் கணக்குத் துறைக்கு பொறுப்பானவர். இத்துறை அரசின் பரிவர்த்தனைகளான வரி வசூல் மற்றும் பணமளிப்புகள் போன்றவற்றை மேற்கொள்ளும்.
வங்கியின் உட்புற கணக்கு மற்றும் வரவு செலவு கணக்குகள் தவிர, தலைமை நிதி அலுவலர் தமது பணியாளர்களுக்காக நிர்வகித்திடும் பரஸ்பர நிதி விகிதத்தை தீர்மானித்தல் போன்ற பெருநிறுவன யுக்திசார் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பானவர் ஆவார்.
மேலும் தலைமை நிதி அலுவலராக, அரசின் வரவு செலவுத் திட்டக் கணக்கீடுகளுக்கு முக்கிய தேவையாக உள்ள பங்காதாயங்களை (Dividends) ரிசர்வ் வங்கி அரசிடம் செலுத்தும் பணிக்கும் பொறுப்பானவர் ஆவார்.
ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934ன் படி, மத்திய வங்கி வாராக் கடன்கள் மற்றும் சந்தேகத்துக்குரிய கடன்கள், சொத்துக்களுக்கான தேய்மானச் செலவுகள், பணியாளர்களுக்கு பணி மூப்புத் தொகை ஆகியவற்றுக்கு நிதியளித்த பிறகு மீதமுள்ளவற்றை அரசிடம் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி ஜூலை முதல் ஜூன் வரை என்ற காலத்தை நிதியாண்டாக பின்பற்றுகிறது.