இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம்
September 14 , 2023 439 days 371 0
இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை (IMEE-EC) நிறுவுவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இது பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்தச் செய்வதன் மூலம் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும்.
இது இரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து வலையமைப்புகள், எரிசக்தி விநியோக அமைப்புகள் மற்றும் தரவு இணைப்புகள் மூலம் அந்த இணைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது சீனாவின் மண்டலம் மற்றும் சாலை முன்னெடுப்பிற்கு மாற்றாக அமையும் அதே வேளையில் வர்த்தகம், தூய்மையான எரிசக்தி மற்றும் பொருளாதார மேம்பாட்டினை அதிகரிக்கவும் முயல்கிறது.
மத்திய கிழக்கு வழித்தடமானது, இரண்டு தனித்தனி வழித்தடங்களைக் கொண்டு உள்ளது.
கிழக்கு வழித்தடமானது இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள முந்த்ரா துறைமுகத்தினை ஃபுஜைரா துறைமுகத்துடன் இணைக்கும்.
பின்னர் சவூதி அரேபியா மற்றும் ஜோர்டான் வழியாக செல்லும் இரயில் பாதையைப் பயன்படுத்துவதன் மூலம் தரப்படுத்தப்பட்ட கொள்கலன்கள் மூலம் இஸ்ரேலியத் துறைமுகமான ஹைஃபாவிற்கு சரக்குப் பொருட்கள் கொண்டு செல்லப்படும்.
ஹைஃபாவில் இருந்து தொடங்கும் மேற்கு வழித்தடத்திலிருந்து இந்திய சரக்குப் பொருட்கள் பிரான்சு நாட்டில் உள்ள மார்சேய்லே போன்ற பல்வேறு துறைமுகங்களுக்கும், இத்தாலி மற்றும் கிரீஸ் நாடுகளின் மற்ற துறைமுகங்களுக்கும் சென்றடையும்.