இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை வலுப்படுத்தும் விதமாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும், ரஷ்யாவின் துணைப் பிரதமர் டிமிட்ரி ரோகோசினும் கலந்து ஆலோசனை நடத்தினர்.
இரு நாட்டுப் பிரதிநிதிகளும் இணைந்து ‘வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார கூட்டுறவு தொடர்பான இந்தியா-ரஷ்யா சர்வதேச அரசாங்க ஆணையத்தின் [India-Russia Inter-Governmental Commission on Trade, Economic, Scientific, Technological and Cultural Cooperation (IRIGC-TEC)]’ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.
இந்த சந்திப்பில் எட்டப்பட்ட முக்கிய முடிவுகள்:
வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான கூட்டுப் பணிக்குழுவின் தரத்தை துணை அமைச்சர் / வர்த்தகச் செயலாளர் அளவில் உயர்த்துதல்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே விவசாயம் மற்றும் மருந்துத் துறைகளில் நல்லுறவை மேம்படுத்துவதற்காக செயற்குழுக்களை உருவாக்கியுள்ளன.
இரு நாட்டு சுங்க நிர்வாகங்களுக்கும் இடையில் சரக்குகள் வருகை / பரிமாற்றம் குறித்த தரவுகளை எளிதாக பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தினை விரைந்து செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.