இந்தியாவின் முதல் அலை ஆற்றலூட்டப்பட்ட வழிகாட்டு மிதவை
November 16 , 2017 2593 days 999 0
சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தொழிற்நுட்ப நிறுவனத்தால் (National Institute of Ocean Technology-NIOT) இந்தியாவின் முதல் அலை ஆற்றலூட்டப்பட்ட வழிகாட்டு மிதவை (Wave - Powered Navigational buoy) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஆற்றல் நிறுவனம் (International Energy Agency) மற்றும் பெருங்கடல் ஆற்றல் திட்ட அமைப்பின் (Ocean Energy Systems) நிர்வாகிகள் குழு சந்திப்பின் போது இந்த மிதவை அறிமுகப்படுத்தப்பட்டு மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தால் சென்னையிலுள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது கடல்வழி பயணங்களின் போது கப்பல்கள் நங்கூரமிட சாத்தியமான பகுதிகளை குறிப்பதற்கும், பவளங்கள் அல்லது பிற அபாயங்கள் உள்ள இடத்தை குறித்திடவும் பயன்படுத்தப்படும் ஓர் நங்கூரமிடப்பட்டு நிலை நிறுத்தப்பட்ட வழிகாட்டு மிதவையாகும்.
பிற வழக்கமான மிதவைகள் சூரிய மின் ஆற்றலை தங்கள் செயல்பாட்டிற்காகப் பயன்படுத்தும். ஆனால் இம்மிதவைகள் அலைகளினால் உண்டாகும் ஆற்றலை தன் இயக்கத்திற்காக மின்கலன்களில் (Battery) சேகரித்து வைத்து பின் பயன்படுத்தும். இதன் மூலம் இவை கப்பல்களுக்கு வழிகாட்டும்.
துறைமுகங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் வரையறுக்கப்பட்ட கடல்பாதை வழி கப்பல் செல்வதற்கு வழிகாட்டிட இம்மிதவைகள் உதவும்.
மேலும் இம்மிதவைகளால் துறைமுக அதிகாரிகளுக்குத் தேவைப்படும் தகவல்களான கடல்பரப்பில் வீசும் காற்றின் வேகம், காற்றின் திசை மற்றும் பிற அம்சங்களையும் பதிவு செய்ய இயலும்.
IEA – OES Meeting
சர்வதேச ஆற்றல் நிறுவனம் – பெருங்கடல் ஆற்றல் அமைப்பு.
International Energy Agency – Ocean Energy System.
சர்வதேச ஆற்றல் நிறுவனம் – பெருங்கடல் ஆற்றல் அமைப்பின் 33-வது நிர்வாகிகள் குழுவின் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
பெருங்கடல் ஆற்றல் அமைப்புத் தொழிற்நுட்ப கூட்டுத் திட்டமானது (Ocean Energy Systems Technology Collaboration Programme) பல்வேறு நாடுகளுக்கிடையேயான ஓர் கூட்டிணைவாகும்.
இத்திட்டமானது சர்வதேச ஆற்றல் நிறுவனத்தால் தோற்றுவிக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ் செயல்படுகின்றது.
2017, ஏப்ரலில் இந்தியா இந்த மன்றத்தில் உறுப்பினரானது.
இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள பெருங்கடல் ஆற்றல் சார்ந்த மேம்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் மேம்பாட்டு குழுவையும் , தகவல்கள் மற்றும் தொழிற்நுட்பங்களையும் இந்தியாவால் அணுகிட இயலும்.