இந்தியாவில் குழந்தை திருமணம் பற்றிய லான்செட் இதழின் ஆய்வறிக்கை
January 13 , 2024 321 days 282 0
இந்தியாவில் குழந்தைத் திருமணம் குறித்து லான்செட் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வறிக்கை, நாடு முழுவதும் குழந்தைத் திருமணம் குறைந்து வருவதைக் குறிப்பிடுகிறது.
ஆனால் முக்கியமாக பெண் குழந்தைகள் மத்தியில் நிகழும் குழந்தைத் திருமணங்களின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவை நான்கு மாநிலங்களில் பதிவானதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அவை பீகார் (16.7%), மேற்கு வங்காளம் (15.2%), உத்தரப் பிரதேசம் (12.5%), மற்றும் மகாராஷ்டிரா (8.2%) ஆகும்.
ஆண் குழந்தைகள் மத்தியில், குஜராத் (29%), பீகார் (16·5%), மேற்கு வங்காளம் (12.9%) மற்றும் உத்தரப் பிரதேசம் (8.2%) ஆகிய மாநிலங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணிக்கைகளைக் கொண்டுள்ளன.
இந்தியாவில் இன்றுவரையில் ஐந்தில் ஒரு பெண் குழந்தைகளுக்கும், ஆறில் ஒரு ஆண் குழந்தைகளுக்கும் சட்டப்பூர்வ திருமண வயதுக்கு முன்னதாகவே திருமணம் செய்து வைக்கப் படுகிறார்கள்.
பெண் குழந்தைகளின் மத்தியில் நிகழும் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கையில் 32.3% அதிகரிப்புடன், மிகப்பெரிய அதிகரிப்பு ஆனது மேற்கு வங்காளத்தில் பதிவானது.
மேற்கு வங்காளத்தில் 5,00,000க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளாக இருக்கும் போதே திருமணம் செய்து வைக்கபடுவதால் அங்கு மிகப்பெரிய அதிகரிப்புப் பதிவாகியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் 18 வயதுக்கு முன் திருமணம் செய்து கொண்ட 20 முதல் 24 வரையான வயதுடைய பெண்களின் எண்ணிக்கையானது 41.6% என்ற அளவில் இந்தியாவிலேயே அதிகபட்ச நிலையில் உள்ளது என்று 5 வது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு எடுத்துரைக்கிறது.
இந்த சதவீதம் ஆனது, 4 வது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் போது அதே அளவில் இருந்தது.
அகில இந்திய அளவில், 18 வயது எட்டுவதற்கு முன்னதாகவே திருமணம் செய்து வைக்கப் பட்ட 20 முதல் 24 வயதுடைய பெண்களின் எண்ணிக்கையானது 23.3% ஆக உள்ளது.
2021 ஆம் ஆண்டில், 2006 ஆம் ஆண்டு குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் கீழ் மேற்கு வங்காளத்தில் 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதே காலகட்டத்தில் தமிழ்நாடு மாநிலத்தில் 169 வழக்குகளும், கர்நாடகாவில் 273 வழக்குகளும், அசாமில் 155 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.