கோவிட் – 19 சோதனை உபகரணங்களை இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் சோதனை ஆய்வகங்களுக்கு வழங்குவதற்கு வேண்டி இந்திய நிறுவனமான மைலேப் மற்றும் ஜெர்மனைச் சேர்ந்த நிறுவனமான அல்டோனா டைனாஸ்டிக்ஸ் ஆகிய இரண்டு தனியார் நிறுவனத்திற்கும் மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது.
சீஜீன் (Seegene) மற்றும் எஸ்டி பயோ சென்சார் (SD Biosensor) ஆகிய இரண்டு தென்கொரிய நிறுவனங்களும் ஆர்டி-பிசிஆர் என்ற முறையினை அடிப்படையாகக் கொண்ட கரோனா வைரஸ் நோய் கண்டறிதல் உபகரணங்களை இந்தியாவில் வழங்குவதற்காக மத்திய அரசிடமிருந்து ஒப்புதலைப் பெற்றுள்ளன.
செயல்முறை
ஆர்டி-பிசிஆர் (RT-PCR/ Reverse transcription polymerase chain reaction) என்பது நிகழ்நேர தலைகீழ் குறிமுறைப் பல்படிம நொதித் தொடர்வினை என்பதைக் குறிக்கிறது.
இது பல்படிம நொதித் தொடர் வினையைப் பயன்படுத்துவதன் மூலம் ஆர்என்ஏவின் தலைகீழ் குறிமுறையை டிஎன்ஏ உடன் ஒன்றிணைக்கும் ஒரு ஆய்வகத் தொழில்நுட்பமாகும்.
இது உயிரணுவில் உள்ள குறிப்பிட்ட ஆர்என்ஏவின் எண்ணிக்கையை அளவிடப் பயன்படுத்தப் படுகின்றது.
வைரசின் ஆர்என்ஏக்களை அளவிடும் இந்தத் தொழில்நுட்பமானது வைரஸ் திரள்களை அடையாளம் காணும் மிகவும் பொதுவான முறைகளில் ஒன்றாகும்.
மற்ற நிறுவனங்கள்
கோவிட் – 19 நோய்க் கண்டறிதலுக்காக 12 விரைவு நோய் எதிர்ப்புச் சோதனை உபகரணங்களுக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நோய் எதிர்ப்பு விரைவுச் சோதனையின் பயன் என்னவெனில் சோதனையின் முடிவுகள் 30 நிமிடங்களுக்குள் கிடைக்கப் பெற்று விடும்.
நோய்த் தொற்று ஏற்பட்டு 7 முதல் 10 நாட்களுக்குப் பின் இந்தச் சோதனையானது நோய்த் தொற்றைக் காண்பிக்கும்.
இந்தச் சோதனையின் போது முடிவு நேர்மறையாக வருவது கோவிட் – 19 தொற்று இருப்பதை உறுதி செய்தாலும், முடிவு எதிர்மறையாக வருவது நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி செய்யாது.
பயோடெக் நிறுவனம்
மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள பயோடெக் நிறுவனமானது கோவிட் – 19 சோதனை உபகரணத்தைத் தயாரிக்கும் இரண்டாவது இந்திய நிறுவனமாகும்.
இது RT-PCR முறையிலான சோதனைக் கருவிகளை உற்பத்தி செய்ய இருக்கின்றது.
இந்த நிறுவனம் இதற்கு முன்பு பன்றிக் காய்ச்சல் என்று பொதுவாக அழைக்கப்படும் H1N1 என்ற மற்றொரு நோய்த் தொற்றிற்காக இந்தியாவின் முதலாவது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சோதனை முறையை அறிமுகப் படுத்தியது.
தனது கோவிட் – 19 நோய்க் கண்டறிதல் சோதனைக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் மதிப்பீடு செய்யப்பட்டு, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடமிருந்து (CDSCO/ Central Drugs Standard Control Organization) வணிக ரீதியிலான ஒப்புதலைப் பெற்ற முதலாவது இந்திய நிறுவனம் மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ் ஆகும்.
“மைலேப் பேத்தோ டிடெக்ட் கோவிட் – 19 தர PCR சாதனம்” என்ற பெயர் கொண்ட இந்தச் சாதனமானது 6 வார காலத்தில் உருவாக்கப்பட்டதாகும்.
இந்தத் திட்டமானது மைலேப் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைத் தலைவரான “மினால் தகவே போன்ஸ்லே” அவர்களால் தலைமை தாங்கப் பட்டதாகும்.