இந்தியாவில் நீதிபதிகளுக்கான உள்ளக விசாரணை செயல்முறை
March 29 , 2025 4 days 35 0
யஷ்வந்த் வர்மா மீதான நன்னடத்தையின்மை குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஓர் உள்ளக விசாரணைக் குழுவை இந்தியத் தலைமை நீதிபதி நிறுவி உள்ளார்.
நீதிபதிகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள் குறித்த உள்ளக விசாரணை மீதான நடைமுறைகளுக்கான ஒரு தீர்மானம் ஆனது 1999 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டு 2014 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் நீதிபதி மீது புகார் பெறப்படும் போது, இந்தப் பிரச்சினையானது பொருத்தமானதா இல்லையா என்பதை இந்தியத் தலைமை நீதிபதி தீர்மானிக்கிறார் அல்லது விசாரணைக்கு உத்தரவாதம் அளிக்கிறார்.
இதன்பின் விசாரணை அவசியமானதாகக் கருதப்பட்டால், அந்த நீதிபதியின் ஆரம்பக் கட்டப் பதில்களுடன் சேர்த்து அது தொடர்புடைய அந்த மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் கருத்துக்களும் கருத்தில் கொள்ளப் படுகிறது.
பின்னர் இந்தியத் தலைமை நீதிபதி மற்ற உயர் நீதிமன்றங்களைச் சேர்ந்த இரண்டு தலைமை நீதிபதிகள் மற்றும் ஒரு மாநில உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்கிறார்.
அந்தக் குழுவானது விசாரணைக்குப் பின்னர், அந்த தவறான நடத்தையானது பதவி நீக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் அளவுக்கு தீவிரத் தன்மை கொண்டது அல்லது போதுமான தீவிரத் தன்மை கொண்டதல்ல என்ற பரிந்துரையை வழங்க முடியும்.
பதவி நீக்கம் செய்ய வேண்டியதில்லை என்று பரிந்துரைக்கப்பட்டால், அந்நீதிபதிக்கு அதற்கேற்ப பதவி மதிப்பீடு வழங்கப்படும்.
ஆனால், அந்நீதிபதியை பதவி அகற்றுவதற்காக பரிந்துரைக்கப்பட்டால், அவர் அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்யும்படி கோரப்படுவார்.
ஆனால் அந்த நீதிபதியானவர் இராஜினாமா செய்ய விரும்பவில்லை என்றால், இந்திய அரசியலமைப்பின் விதிகளின் படி, பாராளுமன்றம் அவரை அந்தப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக, கண்டறிந்தத் தகவல்கள் குறித்து குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் தெரிவிக்கப்படும்.
உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு எதிரான எந்தவொருப் புகாரும், உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் பிற உயர் நீதிமன்றங்களின் இரண்டு தலைமை நீதிபதிகள் அடங்கிய குழுவினால் விசாரிக்கப்படும்.
ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி மீது புகார் வைக்கப்பட்டால், அந்தக் குழு மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டதாக அமைக்கப்படும்.