இந்தியாவின் பெரிய மாநிலங்களில், பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையினை / மூன்று மொழிகளைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு கடைசி இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 1905 (3.2%) பள்ளிகள் மட்டுமே இந்த மும்மொழிக் கல்வியினை வழங்குகின்றன.
35,092 (59.8%) பள்ளிகள் இரண்டு மொழிகள் அடிப்படையிலான கல்வியையும், 21,725 (37%) பள்ளிகள் ஒரு மொழி அடிப்படையிலான கல்வியையும் வழங்குகின்றன.
ஒட்டு மொத்தமாக, இந்தியாவில் சுமார் 9,06,225 (61.6%) பள்ளிகள் மூன்று மொழிகள் அடிப்படையிலான கல்வியையும், சுமார் 4,16,601 (28.3%) பள்ளிகள் இரண்டு மொழிகள் அடிப்படையிலான கல்வியையும், சுமார் 1,49,065 (10.1%) பள்ளிகள் ஒரு மொழியை மட்டுமே அடிப்படையிலான கல்வியையும் வழங்குகின்றன.
உத்தரப் பிரதேசத்தில் மூன்று மொழிகள் அடிப்படையிலான கல்வியையும் வழங்கும் பள்ளிகள் அதிக எண்ணிக்கையில், அதாவது 82.8% (2,11,114) ஆக உள்ளன.
அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா 68.7% (74,342), இராஜஸ்தான் 65.1% (70,148), மத்தியப் பிரதேசம் 55.4% (68,388), கர்நாடகா 76.4% (57,950) மற்றும் குஜராத் 97.6% (52,357) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
தென் மாநிலங்களில், கேரளாவில் சுமார் 11,367 (71.7%) பள்ளிகள் மூன்று மொழிகள் அடிப்படையிலான கல்வியைக் கற்பிக்கின்றன என்ற ஒரு நிலைமையில் ஆந்திரப் பிரதேசத்தில் 26,696 (43.5%) பள்ளிகளும், தெலுங்கானாவில் 26,828 (62.5%) பள்ளிகளும் மூன்று மொழிகள் அடிப்படையிலான கல்வியை வழங்குகின்றன.
ஒட்டு மொத்தமான அளவில், இந்தியா முழுவதும் மும்மொழிப் பள்ளிகளில் சுமார் 74.7% மாணவர் சேர்க்கை பதிவாகியுள்ளது.
இந்தப் பள்ளிகளில் அதிக மாணவர் சேர்க்கை கொண்ட பெரிய மாநிலங்கள் குஜராத் (97.6%), கர்நாடகா (89.5%), தெலுங்கானா (89.3%), மகாராஷ்டிரா (87%) மற்றும் உத்தரப் பிரதேசம் (81%) ஆகியனவாகும்.
பெரிய மாநிலங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கையினைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு (10.8%) ஆகும் என்ற நிலையில் அதைத் தொடர்ந்து பீகார் (58%), அசாம் (58.6%), ஜார்க்கண்ட் (59%) ஆகியவை உள்ளன.